கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் 'இன்று நேற்று நாளை 2' பணிகள் தொடக்கம்

கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் 'இன்று நேற்று நாளை 2' பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் 'இன்று நேற்று நாளை 2' பணிகள் தொடங்கப்படும் என்று திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான படம் 'இன்று நேற்று நாளை'. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். சி.வி.குமார் மற்றும் ஞானவேல் ராஜா இணைந்து தயாரித்த இந்தப் படத்துக்கு, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்தார்.

2019-ம் ஆண்டு இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளதாகவும், ஆர்.ரவிக்குமார் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை,வசனம் எழுத, அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.கார்த்திக் இயக்கவுள்ளார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஷ்ணு விஷால் மற்றும் கருணாகரன் ஆகியோர் இதிலும் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் படம் தொடர்பாக எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்த நிலையில், இயக்குநர் ரவிக்குமார் கதையை அனுப்பிவிட்டார் என்றும், ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக அமையும் என்றும் சி.வி.குமார் தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தெரிவித்தது.

சில தினங்களுக்கு முன்பு, தங்களுடைய தயாரிப்பில் வெளியான படங்களில், எந்தப் படத்தின் 2-ம் பாகத்தை வெள்ளித்திரையில் காண ஆவலாக இருக்கிறீர்கள் என்று திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தியது. அதில் 'சூது கவ்வும் 2', 'தெகிடி 2' மற்றும் 'மாயவன் 2' ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த வாக்கெடுப்பின்கீழ் ரசிகர் ஒருவர், "எங்களுக்கு 'இன்று நேற்று நாளை 2' வேண்டும்" என்று தெரிவித்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில், " ‘இன்று நேற்று நாளை 2’ கதைப்பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ஊரடங்கு முடிந்தவுடன் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்படும்" என்று பதிலளித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in