18 மணிநேர சண்டைக் காட்சி; விக்ரம் எடுத்துள்ள ரிஸ்க்: 'கோப்ரா' படக்குழுவினர் பகிர்வு

18 மணிநேர சண்டைக் காட்சி; விக்ரம் எடுத்துள்ள ரிஸ்க்: 'கோப்ரா' படக்குழுவினர் பகிர்வு
Updated on
1 min read

18 மணிநேர சண்டைக் காட்சி மற்றும் அதில் விக்ரம் எடுத்துள்ள ரிஸ்க் குறித்து 'கோப்ரா' படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரமின் பிறந்த நாள் இன்று. அவருக்கு தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பதிவில் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். கரோனா ஊரடங்கால் விக்ரமும் வீட்டிலேயே இருக்கிறார். யாரையும் சந்திக்கவில்லை.

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் தற்போது நடித்து வரும் 'கோப்ரா' படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் இயக்குநர், தயாரிப்பு வடிவமைப்பாளர், நடன இயக்குநர், சண்டை இயக்குநர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் விக்ரமுடன் நடித்த அனைத்து நடிகர்களும் ஒன்றிணைந்து விக்ரம் குறித்துப் பேசி அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விக்ரம் படப்பிடிப்பு அரங்கிற்குள் வந்தால், லைட் மேன் தொடங்கி அனைவரிடமும் சிரித்துக் கொண்டே பேசுவார். அவருடைய சிரிப்புக்கு மயங்காதவர்கள் இருக்கவே முடியாது என்று இந்த வீடியோவில் பலரும் பேசியுள்ளனர்.

மேலும், இதில் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அதில், "18 மணிநேரமாக ஒரு முக்கியமான சண்டைக் காட்சியைப் படமாக்கினோம். ரொம்பவே ரிஸ்க் எடுத்து அதில் நடித்தார். அவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும், உடனே வேறொரு காட்சியை எடுத்தாக வேண்டும். ஏனென்றால் நடிகர்கள் அனைவருமே அன்றிரவு கிளம்புகிறார்கள். அந்தச் சமயத்தில் விக்ரம் சாரிடம் ரொம்பவே தயங்கித்தான் கேட்டேன். உடனே நடித்துக் கொடுத்தீர்கள்" என்று பேசியுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன், "கடின உழைப்பு என்றால் அது விக்ரம் சார். 'கோப்ரா' படத்தில் ஒரு நீளமான சண்டைக்காட்சி இருக்கிறது. டூப்பே இல்லாமல் நிறையக் காட்சிகளில் அவரே நடித்துள்ளார். ரொம்பவே ரிஸ்க் எடுத்து நிறையக் காட்சிகள் பண்ணியிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார் திலீப் சுப்பராயன்.

18 மணிநேர சண்டைக் காட்சி படப்பிடிப்புக்குப் பிறகு, ஒரு காட்சி நடித்துக் கொடுத்ததிற்காக சில நடிகர்களும் இந்த வீடியோவில் நன்றி தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in