

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டவர்களை விஷால் குழுவினர் சந்தித்து ஆதரவு கோரினர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. தற்போதைய தலைவர் சரத்குமார் தலைமை யில் ஒரு அணியும், நடிகர் நாசரை முன்னிறுத்தி விஷால் தலைமையில் மற்றொரு அணியும் மோத தயாராகி வருகின்றன. விஷால் அணியில் நடிகர்கள் கார்த்தி, கரு ணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், முன்னணி நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்ட விஷால் அணியினர் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து கமல்ஹாசனையும் சந்தித்தனர். அப்போது, தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு அவர்கள் கேட்டுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து நடிகர் விஷால் கூறும்போது, ‘‘ரஜினி, கமல், விஜய் மட்டுமின்றி அனைத்து நடிகர்களையும் சந்திக்க உள்ளோம். இது, எங்கள் அணிக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்பதற்கான சந்திப்பு அல்ல. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க உள்ள தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்குத்தான்.
அதே நேரத்தில் நடிகர் சங்கத்தில் இதுவரை நடந்தது என்ன, எங்கள் அணி செய்ததும் செய்யப்போவதும் என்ன என்பது குறித்தும் விளக்கினோம்’’ என்றார்.