

'லொள்ளு சபா' நிகழ்ச்சியைப் படமாக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை இயக்குநர் ராம்பாலா தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுக்கவே கரோனா வைரஸ் அச்சத்தால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருப்பதால், இதை வைத்து டிஆர்பியை அதிகரித்துக் கொள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் முடிவு செய்தன.
இதனால், பழைய ஹிட்டடித்த சீரியல்கள், நிகழ்ச்சிகள் என ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இதில் விஜய் தொலைக்காட்சி மீண்டும் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியை காலை 7.30 மணியளவில் ஒளிபரப்பு செய்து வருகிறது.
இந்த நிகழ்ச்சி மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றிருந்தாலும், இதை ஏன் படமாக்கவில்லை என்பதற்கான காரணத்தை இப்போது இயக்குநர் ராம்பாலா தெரிவித்துள்ளார்.
'லொள்ளு சபா' அதிகப் புகழை அடைந்தபோது அதை முழு நீளத் திரைப்படமாக மாற்றும் யோசனையை வைத்திருந்ததாகவும், அதற்காக ஒரு பழைய தமிழ்ப் படத்திலிருந்து கருவையும் மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராம்பாலா.
ஆனால், அந்தப் படம் நடக்கவே இல்லை என்ற வருத்தத்தில் இருந்தபோது, 'தமிழ்ப் படம்' வெளியானது. அந்தப் படத்தின் அடிப்படை யோசனை 'லொள்ளு சபா' நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்டதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் ராம்பாலா.
'தமிழ்ப் படம்' வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால், அப்படியே தனது முயற்சியைக் கைவிட்டு விட்டாராம் ராம்பாலா.