

கண்ணூரில் இருக்கும் கரோனா அவசர உதவிக்கான மையத்தில் நடிகை நிகிலா விமல் பணிபுரிந்து வருகிறார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களுக்கான உதவிகளுக்காக தொலைபேசி உதவி மையங்கள் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 தொற்று குறித்த விழிப்புணர்வு, தகவல்கள் மற்றும் அவசர உதவிக்கு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே அந்தந்த மாநிலங்களுக்கான தனி தொலைபேசி உதவி மையம் (கால் சென்டர்) அமைக்கப்பட்டுள்ளது.
அப்படி கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் அந்தப் பகுதி மக்களுக்கான கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்களுக்கான ஏற்பாடுகளையும் இந்த மையங்கள் செய்து வருகின்றன.
தமிழில் 'வெற்றிவேல்', 'கிடாரி', 'தம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்த நிகிலா விமல், தற்போது கரோனாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள கால் சென்டரில் பணியாற்றி வருகிறார். அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் தேவைப்படுகிறது என்று வரும் தொலைபேசி அழைப்புகளை எடுத்துப் பேசி, என்ன வேண்டுமென பட்டியலிட்டு, அதை உரிய அதிகாரிகளுக்கு அனுப்புகிறார்.
பிரபலமானவர்கள் மக்கள் சேவைக்கு வரவேண்டும் என்று உதவி மையம் கூறியதால் தானாக முன் வந்து இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறும் நிகிலா, அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் எங்கள் தன்னார்வலர்கள் மூலம் அவர்கள் வீட்டுக்கு அந்தப் பொருட்களைச் சென்றுசேர்ப்பதே எங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார். மேலும் தன்னிடம் பேசுபவர்களிடம் தான் நிகிலா விமல் பேசுகிறேன் என்பதை அவர் சொல்வதில்லை.
தினமும் தலிபரம்பா பகுதியிலிருக்கும் தனது வீட்டிலிருந்து 20 கி.மீ. பயணம் செய்து இந்த மையத்துக்கு வரும் நிகிலா, காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பணியாற்றுகிறார். தனக்கு இது புது அனுபவமாக இருக்கிறதென்றும், தன்னால் இந்த சூழலில் ஏதோ ஒரு விதத்தில் மக்களுக்கு உதவ முடிவதில் மகிழ்ச்சி என்றும் கூறுகிறார். மேலும் பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால் தன்னால் தினமும் வர முடிவதில்லை என்று வருத்தப்படுகிறார்.