

தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வந்துள்ளன. 2000-ம் ஆண்டு ஏப்ரல் 14 வரை வெளியான அனைத்துக் காதல் படங்களையும் அந்தக் கதைக்கு மையமான காதல் வெற்றியா தோல்வியா என்பதை வைத்து இரண்டு வகைகளுக்குள் அடக்கிவிடலாம். காதலர்கள் இணைவதும் சில படங்களில் இருவரும் அமரராகிச் சேர்வதும் வெற்றி என்று எடுத்துக்கொள்ளப்படும். இருவரில் ஒருவர் இறப்பது அல்லது இருவரும் மனம் ஒப்பிப் பிரிவது என்பதைக் காதல் தோல்வி என்று எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் காதலர்கள் காதலில் வெற்றி பெறுவது போன்ற படங்களில் அந்த இருவரும் வாழ்வில் இணைவதுதான் முடிவாக இருக்குமேயன்றி இணைந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை மையமாகக் கொண்ட படங்கள் காதலர்களின் திருமண வாழ்க்கையை விரிவாகப் பேசிய படங்கள் அதுவரை இல்லவே இல்லை என்று சொல்லலாம். They lived happily ever after என்று ஆங்கிலத்தில் சொல்வது போல் பல போராட்டங்களுக்குப் பிறகு காதலில் இணைந்தவர்கள் அதன் பிறகு சந்தோஷமாக வாழ்வார்கள் என்ற மனநிறைவுடன் திரையரங்கை விட்டுச் செல்வார்கள்.
திருமணத்துக்குப் பிறகும் வெல்லும் காதல்
ஆனால் வாழ்க்கை சினிமாவைப் போல் இருப்பதில்லை. காதலர்கள் வாழ்விணையராவது வாழ்வில் ஒரு இனிய தொடக்கம்தானே தவிர முடிவல்ல. காதலில் இணைபவர்கள் ஒன்றாக வாழத் தொடங்கும்போது எப்படி வாழ்கிறார்கள். காதலை எந்த அளவு தக்கவைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த இணையரின் வாழ்வு அமையும். ஒரே வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கும்போது சின்ன சின்ன சண்டைகள், சச்சரவுகள், வாக்குவாதங்கள், கோபங்கள், ஆற்றாமைகள் வரவே செய்யும். இவையெல்லாம் இல்லறத்தின் மீது வீசப்படும் பாறாங்கற்கள். அந்தப் பாறாங்கற்களின் வலிமையைத் தாங்கும் சுவராக காதல் எந்த அளவு வலுவாக இருக்கிறதோ அந்த அளவுக்கே இல்லறமும் அதன் இன்பமான வாழ்வும் பாதுகாப்பாக இருக்கும். அதைப் பேசிய படம்தான் மணிரத்னம் எழுதி இயக்கிய ‘அலைபாயுதே’.
காதல் அரும்புவதையும் பல தடைகளைத் தாண்டி காதலித்தவர்கள் இணைவதையும் இணைந்த பின் அவர்கள் வாழ்வையும் அந்த வாழ்வில் ஏற்படும் சிக்கல்களையும் அந்தச் சிக்கல்கள் தீர்வதையும் இவை அனைத்துக்கும் அடிநாதமாக ஆழமான காதல் உயிர்ப்புடன் இருப்பதையும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியதாலேயே இந்திய சினிமாவின் முக்கியமான காதல் திரைப்படங்களில் ஒன்றாக ‘அலைபாயுதே’ திகழ்கிறது.
புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு நாளான ஏப்ரல் 14 அன்று வெளியான ‘அலைபாயுதே’ மிகப் பெரிய வெற்றிபெற்றது. விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. இளைஞர்களை மட்டும் ஈர்க்கும் காதல் படங்கள் சாதாரண வெற்றியைப் பெறும். எல்லா வயதினரையும் ஈர்க்கும் காதல் படங்களில் மிகப் பெரிய வெற்றி பெறுவதோடு காலத்தைக் கடந்து நிற்கும். ’தேவதாஸ்’, ‘கல்யாணப் பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ’16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘வாழ்வே மாயம்’, ’புதுக்கவிதை’, ’ஜானி’ ’புன்னகை மன்னன்’, ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘மெளன ராகம்’, ‘இதயம்’, ‘காதல் கோட்டை’, ‘காதலுக்கு மரியாதை’ என அமர காவியங்களாகிவிட்ட காதல் படங்களின் நெடிய வரிசையில் ‘அலைபாயுதே’ இடம்பெற்றது அப்படித்தான்.
கிடைத்தார் புதிய சாக்லேட் பாய்
காதலை மையமாகக் கொண்ட படங்களுக்கு மையக் கதாபாத்திரம் ஏற்கும் நாயகனும் நாயகியும் மிக முக்கியம். இன்று மறக்க முடியாதவையாக அமைந்துவிட்ட கார்த்திக்-ஷக்தி கதாபாத்திரங்களுக்குப் புதுமுகங்களைத் தேர்ந்தெடுக்க விரும்பிய மணிரத்னம் ‘இருவர் படத்துக்கு போட்டோ ஷூட் நடத்தி நிராகரிக்கப்பட்ட மாதவனை நாயகனாக்கினார். கார்த்திக், அரவிந்த் சாமிக்கு சற்றே வயதாகிவிட, அஜித், பிரசாந்த் எல்லாம் ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்க, அடுத்த இளம் சாக்லேட் பாய்க்காகக் காத்திருந்த தமிழ் யுவதிகளுக்கு வசமாக வந்து சேர்ந்தார் மாதவன். அவரது அழகும் மிடுக்கும் துறுதுறுப்பும் துடிப்பும் அவரை இளம் பெண்கள் மனதுக்கு அணுக்கமாக்கின. “நீ அழகா இருக்கன்னு நெனக்கல உன்ன காதலிக்கறேன்னு நெனக்கல ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்குன்னு” தத்தித் தத்தித் தமிழ் பேசிய அவரை தமிழ்ச் சமூகத்துக்குப் பிடித்துப்போனது.
நாயகிக்கும் சில புதுமுகங்களை தேடி, கடைசியில் முன்னாள் குழந்தை நட்சத்திரமும் அப்போது சில படங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்தவருமான ஷாலினியைத் தேர்ந்தெடுத்தார். இந்தப் படம் வெளியாகி ஒரு மாதத்துக்குள் அஜித்தை திருமணம் செய்துகொண்டார் ஷாலினி. அதற்குப் பிறகு அவரை திரையில் காண முடியவில்லை (ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ‘பிரியாத வரம் வேண்டும்’ 2001 பிப்ரவரியில் வெளியானது). ஷாலினியின் கடைசிப் படங்களில் ஒன்றாக அமைந்துவிட்ட ‘அலைபாயுதே’ அவரை ரசிகர்கள் என்றும் மறக்க முடியாமல் செய்துவிட்டது. ‘சினேகிதனே’, ‘எவனோ ஒருவன்’ பாடல்களில் அவர் வெளிப்படுத்திய மிகையற்ற பாவங்களும் ’பச்சை நிறமே’ பாடலில் பல நிற ஆடைகளில் தோன்றிய அவரது அழகையும் இரண்டாம் பாதி எமோஷனல் காட்சிகளில் அவரது கச்சிதமான நடிப்பும் தமிழ் சினிமா ரசிகர்கள் தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்படும் என்பதில் ஐயமே இல்லை.
வலுவான துணைக் கதாபாத்திரங்கள்
’அலைபாயுதே’ காதல் படம் என்றாலும் துணைக் கதாபாத்திரங்களும் மிக வலுவாக அமைக்கப்பட்டிருக்கும். எல்லா துணைக் கதாபாத்திரங்களுக்குமே மிகக் குறைவான காட்சிகள்தான் என்றாலும் ஒவ்வொருவரும் மனதில் நிற்பார்கள். நாயகனின் சற்றே பணக்கார திமிர் பிடித்த தந்தையாக தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், தாயாக கே.பி.எ.சி.லலிதா, நாயகியின் சுயமரியாதை மிக்க தந்தையாக ரவிபிரகாஷ் (அறிமுகம்), தாயாக நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் மறுவருகை புரிந்த ஜெயசுதா, நாயகியின் அக்காவாக சுவர்ணமால்யா (அறிமுகம்), அத்தை மகனாக திக்குவாயில் பேசும் விவேக், பெண் பார்க்க வருபவராக கார்த்திக் குமார், நாயகன் – நாயகி திருமணத்துக்குப் பிறகு அவர்களது வீட்டு உரிமையாளராக மணிரத்னத்துடன் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அழகம்பெருமாள், காவல்துறை அதிகாரியாக வேணு அரவிந்த், ஒரே ஒரு காட்சியில் வந்துவிட்டுப் போகும் அரவிந்த் சாமி, குஷ்பு, பார்வையாளர்களால் முகத்தை நினைவில் வைத்துக்கொள்ள முடியாத மளிகைக் கடைக்காரர், நாயகனின் நண்பர்களாக வருபவர்கள் என அனைத்து துணைக் கதாபாத்திரங்களும் மனதில் பதிந்துவிடும்.
காலத்தை வென்ற பாடல்களும் ஒளி ஓவியமும்
மற்ற பல காதல் படங்களைப் போலவே இந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பாடல்கள் மிக முக்கியப் பங்காற்றின. முதலில் இதை பாடல்களே இல்லாத படமாக எடுக்கத்தான் மணிரத்னம் திட்டமிட்டிருந்தார் என்பது பலருக்கு ஆச்சரியம் அளிக்கலாம். ஆனால் ரகுமான் கொடுத்த ஒன்பது பாடல்களும் சிறப்பாக இருந்ததால் அவற்றைப் பயன்படுத்தினார். அனைத்துப் பாடல்களும் மிகப் பெரிய ஹிட் ஆனதோடு இன்றுவரை அனைத்துத் தலைமுறையினராலும் கேட்கப்படும் பாடல்களாக இருக்கின்றன. ”உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன். வேலை வரும்போது விடுதலை செய்து வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்” என்ற வைரம் போல் ஜொலிக்கும் வரிகளால் பாடல்களை நிரப்பியிருந்தார் வைரமுத்து.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மணிரத்னமும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் இணைந்தார்கள். இதற்கு முன்பாக அவர்கள் கூட்டணியில் 1993 இல் வெளியான படம் ‘திருடா திருடா’. ஒளி ஓவியர் ஸ்ரீராமின் இருப்பு படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பளிச்சிடும். அனுபவஸ்தரான ஸ்ரீராம் ஒவ்வொரு காட்சியிலும் இளமையை அள்ளித் தெளித்து இளம் ஒளிப்பதிவாளர்களுக்குப் பாடமெடுத்திருப்பார். குறிப்பாக ‘பச்சை நிறமே’ பாடலுக்கு டிஜிட்டல் ஒளிப்பதிவு உத்தியைப் பயன்படுத்தினார். இன்று டிஜிட்டல் ஒளிப்பதிவையே அனைவரும் பயன்படுத்துகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பே அதை இந்தப் படத்தின் மூலம் தமிழுக்குக் கொண்டுவந்துவிட்டார் ஸ்ரீராம்.
இந்தப் படத்தில் சில வருட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னமே வசனம் எழுதியிருப்பார். அவரது ஸ்டைலில் சுருக்கமான நறுக்கென்ற வசனங்கள் ஒவ்வொன்றும் நினைவில் நிற்கின்றன. குறிப்பாக நாயகனின் பெற்றோர் நாயகியின் வீட்டுக்கு வரும் காட்சியில் அந்த இரண்டு குடும்பங்களுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளியை அவர்களுக்குள் ஒத்துவராது என்பதை மிகத் துல்லியமான வசனங்கள் மூலமாகவே கடத்திவிடுவார் மணிரத்னம். மறுபுறம் காதல் வசனங்கள் நாயகன் தன் நண்பர்களுடன் பேசும் வசனங்கள் அனைத்திலும் இளமை ததும்பி வழியும்.
காலமாற்றத்துக்குத் தகவமைத்துக்கொண்ட படைப்பாளி
1980களிலும் 1990களிலும் கோலோச்சிக் கொண்டிருந்த இயக்குநர்கள் பலரின் படங்களுக்கு இன்று மவுசு இல்லை. பலர் படம் இயக்குவதை நிறுத்திவிட்டனர். ஆனால் மணிரத்னம் படங்களுக்கு இந்த 2020-ம் ஆண்டிலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இத்தனைக்கும் கடந்த இருபது ஆண்டுகளில் அவருடைய பல படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. ரசிகர்களை ஏமாற்றியிருக்கின்றன. ஆனாலும் அடுத்ததாக அவர் இயக்கத்தில் வெளியாகப் போகும் படத்துக்குக்கூட அதில் நடித்தவர் யாராக இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சிக்கு இளைஞர்கள் கூட்டம் திரையரங்குகளில் வரிசை கட்டி நிற்கும். இந்த அளவு மணிரத்னத்துக்கான மதிப்பு குறையாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் அவர் தன்னைக் காலத்துக்கேற்பத் தகவமைத்துக்கொண்டதுதான். அந்தத் தகவமைப்பின் முதல் அழுத்தமான தடம்தான் ‘அலைபாயுதே’.
நடிப்பு, இசை, பாடல்கள், ஒளிப்பதிவு என அனைத்தும் இருந்தாலும் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த கேப்டனாக இயக்குநர் மணிரத்னம் புத்தாயிரத்தை தன் தனி முத்திரையுடன் தொடங்கிய படம் என்பதே ‘அலைபாயுதே’வின் மிக முக்கியமான சிறப்பு.,