ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் மணிரத்னம்

ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் மணிரத்னம்
Updated on
2 min read

கரோனா ஊரடங்கில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு பணியும் நடைபெறாமல், கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்பதால் பிரபலங்களும் வீட்டிலேயே இருக்கிறார்கள்.

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பும் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மணிரத்னம் வீட்டிலேயே இருக்கிறார். அவருடைய மகன் இங்கிலாந்தில் இருந்து திரும்பியதால், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்குப் பாராட்டுக்கள் குவிந்தன.

இதனிடையே, இதுவரை மணிரத்னம் தனியாக ரசிகர்களுடன் கலந்துரையாடியதில்லை. மேலும் அவர் எந்தவொரு சமூக வலைதளத்திலும் இல்லை. தற்போது கரோனா ஊரடங்கால் ரசிகர்களுடன் கலந்துரையாட முடிவு செய்துள்ளார் மணிரத்னம்.

அவரது மனைவி சுஹாசினியின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (ஏப்ரல் 14) மாலை 5 மணியளவில் மணிரத்னம் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார். இது தவிர்த்து, மணிரத்னம் உங்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவிப்பையும் சுஹாசினி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நண்பர்களே, கடந்த 40 வருடங்களாக மணிரத்னத்தின் பணியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவர் உங்களைப் பார்ப்பதற்கான நேரமில்லையா இது? 25 விநாடிகளில் உங்களை அறிமுகம் செய்துகொண்டு, அவரிடம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி மற்றும் உங்கள் கேள்விகளை வீடியோவாக அனுப்புங்கள். அவர் அதைப் பார்த்து பதில் சொல்வார். உங்கள் வீடியோக்களை வாட்ஸப்பில் 9094677777 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்"

இவ்வாறு சுஹாசினி தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக சமூக வலைதளத்தில் மணிரத்னம் நேரலையாகக் கலந்துரையாட இருப்பதால், அவருடைய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மேலும், இன்று (ஏப்ரல் 14) மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' படம் வெளியான நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Finale of naam calm day 21 live @5 pm @suhasinihasan

A post shared by Suhasini Hasan (@suhasinihasan) on

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in