

உதவி வேண்டும் என கோரிய திருநங்கைகளுக்கு, உடனடியாக ரஜினி உதவி செய்திருக்கிறார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. 21 நாட்கள் ஊரடங்கு என்பது நாளையுடன் (ஏப்ரல் 14) முடிவடைகிறது. இதனை முன்னிட்டு நாளை காலை 10 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
இந்த ஊரடங்கால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு திரையுலகினர் பலரும் உதவிகள் செய்து வருகிறார்கள்.
அதே போல் சாலையோரத்தில் இருக்கும் தினசரி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் தமிழக அரசு உதவிகள் செய்கிறது. மேலும், திரையுலக பிரபலங்கள், நடிகர்களின் ரசிகர்கள், அரசியல் கட்சியினர் என தொடங்கி உதவிகள் செய்து வருகிறார்கள்.
இதனிடையே நேற்று (ஏப்ரல் 12) ரஜினியின் வீட்டிற்கு 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உதவிகள் கோரி சென்றிருக்கிறார்கள். நீண்ட நேரமாகியும் யாரும் பதிலளிக்காத காரணத்தால், ரஜினி வெளியே வராமல் அங்கிருந்து போக மாட்டோம் என்று திருநங்கைகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்துக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இருவரும் திருநங்கைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் பணம் அளித்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். ரஜினிகாந்த் குடும்பத்தினர் செய்த உதவிக்கு, "5 ஆயிரம் ரூபாய் கொடுத்ததிற்கு நன்றி. இந்தச் சமயத்தில் இது எங்களுக்கு 1 லட்ச ரூபாய்க்கு சமம்" எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.