

கரோனா அச்சுறுத்தலால் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ஒத்திவைத்திருப்பதாக 'திரெளபதி' இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார்.
இயக்குநர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி'. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்திருந்தார். கூட்டு நிதி முயற்சியில் இயக்குநர் மோகனே தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் உருவாக்கிய சர்ச்சையால், பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
1 கோடி ரூபாய்க்கும் குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தப் படத்தில் முதலீடு செய்த அனைவருக்குமே 3 மடங்கு லாபம் கிடைத்ததை இயக்குநர் மோகன் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அதிலும் 'திரெளபதி'யில் நாயகனாக நடித்த ரிச்சர்ட், நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக இயக்குநர் மோகன் தெரிவித்தார்.
தற்போது கரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதால் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ஒத்திவைத்துள்ளார் மோகன். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறுகையில், "எங்களின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை சித்திரை முதல் நாளில் வெளியிடும் ஆவலில் இருந்தேன். ஆனால் தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் அறிவிப்பை சில காலம் தள்ளி வைத்து உள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவும்.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்" என்று இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார்.
- Mohan G