

எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் நான் இல்லை, எனது பெயரில் போலியாக ஆரம்பித்திருக்கிறார்கள் என நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
'சவுகார்பேட்டை' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த். லட்சுமி ராய் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் 'வாலு' படத்தில் சிம்பு, அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். "அஜித் சார் ரசிகராக இருப்பது நல்லது. அதற்காக அவருடைய முகமூடி உள்ளிட்ட விஷயங்களை கைதட்டல்களாக உபயோகித்து இருப்பது எரிச்சலுட்டுகிறது. சொந்தமாக நடியுங்கள் சிம்பு. வருத்தங்கள்" என்று நடிகர் ஸ்ரீகாந்த் என்ற பெயரிடப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தக் கருத்தால் சிம்பு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இந்த கருத்து குறித்து ஸ்ரீகாந்த்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, "முதலில் ட்விட்டர் தளத்தில் நான் இல்லை. என்னுடைய பெயரை தவறாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.
சொந்த பெயரில் தளம் ஆரம்பித்து கருத்து தெரிவிக்க வேண்டியதானே, ஏன் அடுத்தவர்கள் பெயரில் ஆரம்பித்து கருத்து தெரிவிக்கிறார்கள் என தெரியவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
சிம்பு என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அஜித், சிம்புவின் ரசிகர்களை பற்றி எந்தவொரு விமர்சனத்தையும் நான் அளிக்கவில்லை. என் பெயரில் போலியாக கணக்கினை வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.