அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள அந்தகாரம்
அட்லி தயாரிப்பில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு 'அந்தகாரம்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
'பிகில்' படத்தைத் தொடர்ந்து, ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் அட்லி. இன்னும் ஷாரூக்கான் - அட்லீ கூட்டணி தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இதனிடையே, தனது அடுத்த படத்தைச் சத்தமின்றி தயாரித்து முடித்துள்ளார் அட்லி. ஜீவா நடிப்பில் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவதொற' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார் அட்லி. அந்தப் படம் வெளியாகி சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகுத் தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'அந்தகாரம்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சுசி சித்தார்த் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக அமுதன் பணிபுரிந்துள்ளார்.
'அந்தகாரம்' படத்தினை அட்லியுடன் இனைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
