இயக்குவதற்கான நேரம் இல்லை: ராதிகா வெளிப்படை
படம் அல்லது சீரியல் இயக்குவதற்கான நேரம் இல்லை என்று ராதிகா சரத்குமார் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. இந்த ஊரடங்கினால் தொலைக்காட்சிகள்தான் கடும் சிக்கலில் உள்ளன.
என்னவென்றால், பல்வேறு சீரியல்கள் அடுத்தடுத்த காட்சிகளின் தொடக்கம் இல்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்குப் பதிலாகப் பழைய ஹிட்டடித்த சீரியல்களை மறுஒளிபரப்பு செய்து வருகிறது.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'சித்தி 2' நிறுத்தப்பட்டு, அதே நேரத்தில் 'சித்தி' ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழல் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு ராதிகா பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் "படம் அல்லது சீரியல் இயக்க நினைத்திருக்கிறீர்களா" என்ற கேள்விக்கு ராதிகா கூறியிருப்பதாவது:
"நான் ’சிறகுகள்’ என்ற தொலைக்காட்சிக்கான படத்தை எடுத்தேன். ஏனென்றால் பல்வேறு காரணங்களுக்காக அந்தப் படத்தின் இயக்குநரால் தொடர முடியவில்லை. 'நாலாவது முடிச்சு' என்ற தொடரை இயக்கியிருக்கிறேன். விஷயம் என்னவென்றால் நான் திரைப்படங்கள், தொடர்கள் என அடுத்தடுத்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இயக்குவதற்கான நேரம் இல்லை.
ராடான் நிறுவனத்துக்கு அர்ப்பணிப்புடன் உழைக்கிறேன். அதை நம்பி பலர் இருக்கின்றனர். எனவே நான் நடிப்பைத் தொடர வேண்டும். இந்த முடிவை நான் தேர்ந்தேதான் எடுத்தேன். இயக்கம் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்கு நேரம், ஆற்றல் என முழு மனதுடன் ஈடுபட வேண்டும். அதைச் செய்யும் நிலையில் நான் இல்லை.
'துருவ நட்சத்திரம்', 'குருதி ஆட்டம்' என ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 6 படங்கள் நிலுவையில் உள்ளன. அதில் நடிக்க வேண்டும். எனவே நடிப்புக்குத்தான் முதல் முக்கியத்துவம். இயக்கத்துக்கு இன்னும் நாளாகட்டும். இப்போதைக்கு 'சித்தி 2' தொடர வேண்டும். வேறெதைப் பற்றியும் என்னால் நினைக்க முடியாது"
இவ்வாறு ராதிகா தெரிவித்துள்ளார்.
