

சமூக வலைதளத்தில் தனது பெயரில் அதிகரிக்கும் போலிக் கணக்குகளால் 'பிக் பாஸ்' அபிராமி காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
'நேர்கொண்ட பார்வை' மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலம் அறியப்பட்டவர் அபிராமி. அனைவருமே அவரை 'பிக் பாஸ்' அபிராமி என்றுதான் அழைத்து வருகிறார்கள். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே அதிகாரபூர்வ கணக்கு இருக்கிறது.
வழக்கம் போல் ட்விட்டர் தளத்தில் இவருடைய பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் அதிகரித்து வந்தன. இவை எதுவுமே என்னுடையது இல்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார். இதனிடையே, டிக் டாக் தளத்திலும் தன்னுடைய பெயரில் போலிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் அபிராமி.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாமிராம் ஸ்டோரி பிரிவில் அபிராமி கூறுகையில், "கடைசி முறையாக இதைப் பகிர்கிறேன். ட்விட்டர் போலிக் கணக்குகளைப் போல டிக் டாக்கிலும் போலிக் கணக்குள் பிரச்சினை தருகின்றன. நான் இன்ஸ்டாகிராமில் மட்டும்தான் இருக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் இங்கு எனக்கு வெரிஃபைட் கணக்கு இருப்பதால் இங்கு எந்தப் பிரச்சினையும் வராது.
இங்கிருந்தும் விரைவில் வெளியேறிவிடுவேன். அனைவரிடமிருந்தும் நிறைய அனுபவித்துவிட்டேன். டிக் டாக்கிலிருந்து எனது அசல் கணக்கை நீக்குகிறேன். போதும் இந்த அசிங்கம். இந்தப் போலிகளை நிஜம் என்று நம்பி நம்மைத் தாக்கும் இந்தப் பொதுமக்களை நினைத்து அதிசயிக்கிறேன்" என்று அபிராமி தெரிவித்துள்ளார்.