

கரோனா வைரஸ் பாதிப்பால் படப்பிடிப்பு இல்லாமல் அவதிப்படும் நடிகர்களுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
கரோனா வைரஸ் அச்சத்தால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு சார்பில் நிதியுதவிகள் வாங்கப்பட்டு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கு உதவ நிதியுதவி அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு, சுமார் 15 லட்ச ரூபாய் மட்டுமே வசூலாகியது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு நிதியுதவி, பொருளுதவி அளிக்க வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுக்கத் தொடங்கினார்கள்.
முன்னதாக, வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்துக்கு உதவ 10 லட்ச ரூபாய் அளித்திருந்தார். தற்போதைய வேண்டுகோளைத் தொடர்ந்து 600 மூட்டை அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி நடிகர்களுக்கு உதவக் கொடுத்துள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகர் சூரியும் 500 கிலோ அரிசி வழங்கியுள்ளார். மேலும், நடிகர் விவேக் 3.5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
யோகி பாபுவும் தன் பங்கிற்கு 1,250 கிலோ அரிசி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.