

கரோனா வைரஸ் பாதிப்புக்கு, நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் 3 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், இந்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஊரடங்கால் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை.
படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு பெப்சி அமைப்பு நிதியுதவி பெற்று, நிவாரண உதவி செய்து வருகிறது. மேலும், பொருளாதார நெருக்கடி மட்டுமன்றி, கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்குமாறும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தற்போது நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் கரோனா நிவாரணத் தொகையாக 3 கோடி ரூபாய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பதிவில் லாரன்ஸ் கூறியிருப்பதாவது:
" 'சந்திரமுகி 2’ படத்துக்காக வாங்கப்பட்ட அட்வான்ஸ் தொலையில், 3 கோடி ரூபாயை கரோனா நிவாரணத் தொகைக்காகக் கொடுக்கிறேன். பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், முதலைமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ 50 லட்ச ரூபாய் கொடுக்கிறேன்.
மேலும், நடன இயக்குநர்கள் சங்கத்துக்குச் சிறப்பு பங்களிப்பாக 50 லட்ச ரூபாயும், எனது மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்காக 25 லட்ச ரூபாயும் மற்றும் நான் பிறந்த ராயபுரத்தில் உள்ள தேசிய நகர் மக்கள் மற்றும் தினசரித் தொழிலாளர்களுக்காக 75 லட்ச ரூபாய் கொடுக்கிறேன். மேலும், அனைத்து உணவுத் தேவைகளும் காவல்துறையினர் உதவியுடன் வழங்கப்படும். சேவையே கடவுள்".
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.