கரோனா வைரஸ் அச்சம்: இளைஞர்களுக்கு எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்

கரோனா வைரஸ் அச்சம்: இளைஞர்களுக்கு எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான வேண்டுகோள்
Updated on
1 min read

கரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக இளைஞர்களுக்கு எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுக்கவே எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால், திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், தங்களுடைய ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரையுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரங்கள் நடித்துப் புகழ் பெற்ற எம்.எஸ்.பாஸ்கர் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"குறிப்பாக நான் இளைஞர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நிலைமை ரொம்ப சீரியஸாக போய்க் கொண்டிருக்கிறது. அரசாங்கம் எப்படியாவது இந்த வைரஸைக் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று பாடுபடுகிறது. காரணமே இல்லாமல் வெளியே சுற்றுவது, தேவையில்லாமல் காவல்துறையினருக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பது என்று நடந்து கொள்ளாதீர்கள். வீட்டில் அடங்கி இருங்கள். பெற்றோர்களுக்கு உதவியாக இருங்கள்.

இந்த வைரஸை ஒழிப்பதற்கு மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். என்னை விட நீங்கள் அனைவரும் சிறுபிள்ளைகளாகத் தான் இருப்பீர்கள். இருந்தாலும் உங்களை எல்லாம் இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து அரசாங்கமும், பெற்றோர்களும் சொல்வதைக் கேளுங்கள். இந்த வைரஸை ஒழிப்பதற்கு உங்களால் ஆன உதவியைச் செய்யுங்கள். நீங்கள் காரணமில்லாமல் வெளியில் வந்து சுற்றாமல் வீட்டிற்குள் இருந்தாலே, நிச்சயமாக இந்த வைரஸை ஒழிக்கலாம். தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்".

இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in