Last Updated : 09 Apr, 2020 11:55 AM

 

Published : 09 Apr 2020 11:55 AM
Last Updated : 09 Apr 2020 11:55 AM

மன்னார் அண்ட் கம்பெனி, எழுத்தாளர் பைரவன், வசந்தி; ஸ்ரீதரின் ‘கல்யாண பரிசு’ ரிலீசாகி 61 வருடங்கள்! 

ஒவ்வொரு தருணத்திலும் தடக்கென்று புத்தாடைக் கட்டிக்கொண்டு, பளீரென்று புத்துணர்ச்சி பெறுவது நாம் மட்டுமல்ல... தமிழ் சினிமாவும்தான். அப்படியாக யாரோ ஒருவர் திடீரென வந்து, ஆடை கட்டி மகிழ்வார். பவுடர் பூசி அழகாக்குவார். தலைவாரி பூச்சூட்டுவார். ஐம்பதுகளின் இறுதியில் அப்படி வந்து, தமிழ் சினிமாவின் சிடுக்கெடுத்து, புதுப்பாதைக்கு கூட்டிச் சென்றவர்... புதுப்பாதையையே உருவாக்கியவர்... இயக்குநர் ஸ்ரீதர். அவர் இயக்கத்தில் வெளியான ‘கல்யாண பரிசு’ என்கிற ஒரு படம் மொத்தத் தமிழகத்துக்கும் கிடைத்த அருமையான, அழகான பரிசு.
மதுராந்தகம் பக்கமுள்ள கிராமத்தில் இருந்து சினிமாவுக்குள் நுழைவதற்கு பட்டபாடு என்றிருந்தாலும் அப்போதைய சுவாரஸ்யம்... ‘இவ்ளோ சின்னப்பையனா இருக்கியேப்பா’என்று பலரும் சொன்னதுதான். பிறகு டிகேஎஸ் அண்ணாச்சிதான், இவரின் எழுத்துத் திறமையை கண்டுகொண்டார். வியந்து பாராட்டினார். ஸ்ரீதரின் படைப்பை நாடகமாக்கினார். திரையுலகப் பிரபலங்கள் பலரும் வந்திருந்த அந்த விழாவின் மேடையில், ஸ்ரீதரை மேடையேற்றிப் பாராட்டினார். ஸ்ரீதர் எனும் மகா கலைஞன் மீது விழுந்த முதல் வெளிச்சம்; முதல் கைத்தட்டல்!
பிறகு படங்களுக்கு கதையோ வசனமோ எழுதிக் கொண்டிருந்தார் ஸ்ரீதர். முன்னதாக, டிஸ்டிரிபியூஷன் ரெப் உட்பட பல வேலைகளைச் செய்தார். பின்னர், வீனஸ் ஸ்டூடியோவின் பார்டனர்களுடன் இணைந்தார். வீனஸ் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம், புத்துயிர் பெற்றது.
ஸ்ரீதர் சொன்ன கதை கேட்பவருக்கெல்லாம் பிடித்துப் போனது. அப்படியிருக்க, பார்ட்னர்களுக்குப் பிடிக்காதா என்ன? கதையைச் சொன்னார். ‘அட’ என்றார்கள். ‘இந்தக் காதல் வேறு மாதிரியா இருக்கு’ என்றார்கள். ‘புதுசா இருக்குன்னு ஆடியன்ஸ் கொண்டாடுவாங்க’ என்று சிலிர்த்தார்கள். அப்படி கேட்கும்போதே கொண்டாடப்பட்ட திரைக்காவியம்தான் ‘கல்யாண பரிசு’.

அப்போதெல்லாம் எம்ஜிஆரையோ சிவாஜியோ போட்டால், பூஜையின் போது மொத்த ஏரியாவே விற்றுவிடும். ’நான் தரேன் எவ்ளோ வேணும்?’ என்று பைனான்ஸியர்கள் வரிசைகட்டி கையில் பணத்துடன் வந்து நிற்பார்கள். ஆனால், எம்ஜிஆர் பக்கமும் போகாமல் சிவாஜி பக்கமும் போகாமல், ‘கல்யாண பரிசு’ படத்தில் ஜெமினி கணேசனை நாயகனாக்கினார். பாஸ்கராகவே வாழ்ந்து காட்டினார் ஜெமினி கணேசன்.
எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும் கேவி.மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியும் அவரவர் பாணியில் இசையால் தமிழகத்தைக் குளிர்வித்துக் கொண்டிருந்தார்கள். சீர்காழி கோவிந்தராஜன், டிஎம்.செளந்தர்ராஜன், டி.ஆர்.மகாலிங்கம், பிபி.ஸ்ரீநிவாஸ் என பலரும் பாடி மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தன் முதல் படத்துக்கு, இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவை நியமித்தார். இன்னொரு விஷயம்... பாடகராக எல்லோருக்கும் ராஜாவைத் தெரியும். ஆனால், அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர்.
ஜெமினி கணேசன் சரோஜாதேவியைக் காதலிப்பார். சரோஜாதேவியும் ஜெமினியை விரும்புவார். சரோஜாதேவியின் அக்கா விஜயகுமாரியோ, ஜெமினிகணேசனை காதலிப்பார். அக்காவின் காதலும் விருப்பமும் தங்கைக்குத் தெரியவர, அக்காவுக்காக தன் காதலையே தியாகம் செய்வார் சரோஜாதேவி. ஜெமினியையும் அப்படி தியாகம் செய்ய மன்றாடுவார். இறுதியில்,தன் காதலியின் விருப்பத்தை நிறைவேற்ற சம்மதிப்பார்.
ஜெமினிக்கும் விஜயகுமாரிக்கும் கல்யாணம். பிறகு மூவரின் வாழ்க்கையிலும் நிம்மதியோ ஆனந்தமோ இல்லாத நிலை. இவர்களை விட்டு சரோஜாதேவி எங்கோ செல்ல, குழந்தையும் பெற்றுவிட்ட நிலையில் விஜயகுமாரி இறந்துவிட, கையில் குழந்தையுடன் உலகமே சூன்யமாகிவிட்டதாகக் கருதும் வாழப் பிடிக்காத ஜெமினி சரோஜாதேவியைத் தேடிக்கொண்டு வர, அங்கே... சரோஜாதேவிக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்க, குழந்தையின் கையில் கடிதத்தைக் கொடுத்து உள்ளே அனுப்பிவிட்டுச் செல்ல, சரோஜாதேவியும் அவரைக் கல்யாணம் செய்துகொள்ளும் நாகேஸ்வர ராவும் அந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ள... அவர்களுக்கு அந்தக் குழந்தைதான் ‘கல்யாண பரிசு’ என்பதுடன் படத்தை முடித்திருப்பார் ஸ்ரீதர்.

அவருக்கென்ன... மிகப் பிரமாதமாக முடித்து நமக்குக் கொடுத்துவிட்டார். ஆனால் படம் பார்த்துவிட்ட வந்த ரசிகர்கள்தான், பல நாட்கள் தூக்கம் வராமல் தவித்தார்கள். வசந்தியின் அதாவது சரோஜாதேவியின் மனவலியையும் ஜெமினியின் வேதனையையும் உள்வாங்கி மருகினார்கள்.
ஒரு படத்தில், கதைக்குள்ளேயே காமெடியை எப்படி நுழைக்கவேண்டும் என்பதற்கு ‘கல்யாண பரிசு’ மிகச்சிறந்த உதாரணம். தங்கவேலு சரோஜா ஜோடியின் கலாட்டாவும் காமெடியும் அமர்க்களம். தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தின் காமெடி தொகுக்கப்பட்டு, அது தனி ரிக்கார்டாக ஆக்கப்பட்டு, கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், கோயில் திருவிழா சமயங்களில் ஒலிபரப்பப்பட்டதென்றால்... அது ‘கல்யாண பரிசு’ காமெடியாகத்தான் இருக்கும். இதுதான் ஆரம்பம்!
மன்னார் அண்ட் கம்பெனி காமெடியையும் எழுத்தாளர் பைரவன் என்று பொய் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டதையும் இன்னும் நூறு ஆண்டுகளானாலும் மறக்கமாட்டார்கள் ரசிகர்கள். தங்கவேலு - சரோஜாவின் காமெடிகளால் வெடித்து ரசித்தார்கள். ரசித்துச் சிரித்தார்கள். அந்த ‘தட்டுனான் பாரு...’ ‘எங்கே... முதுகுலயா?’ என்கிற வசனங்கள் இன்றைக்கும் பாப்புலர்.
உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதிய ஸ்ரீதரின் வசனங்கள் ஒருபக்கம். இந்தியாவின் ஒளிப்பதிவு மேதையும் ஸ்ரீதரின் மிக நெருங்கிய நண்பருமான ஏ.வின்செண்டின் ஒளிப்பதிவு இன்னொரு பக்கம். ஏ.எம்.ராஜாவின் மனதை வருடிக் கொடுக்கும் இசை இன்னொரு பக்கம், ஜெமினி, சரோஜாதேவி, விஜயகுமாரி எனும் முக்கோணக் காதல் கதை என்கிற வார்த்தையையும் கதையாடலையும் உருவாக்கிய ஸ்ரீதரின் திரைக்கதை ஜாலம் ஒருபக்கம் என நாலாபக்கமுமாக நம்மைக் கட்டிப் போட்டது ‘கல்யாண பரிசு’.
’வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ‘ஆசையினாலே மனம்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ’அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு’, ’உன்னைக் கண்டு நானாட’, ‘காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்’ என்று எல்லாப் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதில் ‘உன்னைக் கண்டு நானாட’வும் ‘காதலில் தோல்வியுற்றான்’ பாடலும் இரண்டிரண்டு முறை வந்து, இன்னும் உலுக்கியது. ’கல்யாண பரிசு’ பட பாட்டுப்புஸ்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு, பாடல்களை மனனம் செய்து, அந்தப் பாடல்களைப் பாடி, தங்கள் காதல் தோல்விக்கு மருந்தாக்கிக் கொண்ட காளையர்களும் யுவதிகளும் அன்றைக்கு ஏராளம்! அன்றைக்கு ஏகப்பட்ட பேர், தங்கள் காதல் தோல்வியின் ஞாபகார்த்தமாக, வேறு யாரையோ திருமணம் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள, அந்தப் பெண் குழந்தைக்கு ‘வசந்தி’ என்று பெயர் வைத்து ஆறுதல்பட்டுக்கொண்டார்கள்.
முதல் படமான ‘கல்யாண பரிசு’ படத்தின் மூலமாகவே இப்படியான பல சாதனைகளைச் செய்திருந்தார் ஸ்ரீதர். புதுமை இயக்குநர் என்று கொண்டாடப்பட்டார்.
1959-ம் ஆண்டு, ஏப்ரல் 9-ம் தேதி வெளியானது ‘கல்யாண பரிசு’. இந்தப் படம் வெளியாகி, 61 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கு மட்டுமல்ல... இன்னும் 60 வருடங்களானாலும் காதல் தோல்விப் படத்துக்கான ஆகச்சிறந்த ஐகான்... அடையாளம் என்று கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும் ‘காதல் பரிசு’... இந்தக் ‘கல்யாண பரிசு’!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x