

தயவு செய்து அரசாங்க உத்தரவை மீறாதீர்கள் என்று த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுக்கவே எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், தங்களுடைய ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரையுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
யுனிசெஃப் உடன் இணைந்து கரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு இருந்தார் த்ரிஷா. தற்போது, தமிழக அரசுக்காக மற்றொரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
"இந்த கரோனா வைரஸ் சீக்கிரமாகப் பரவக்கூடிய ஒரு வைரஸ். வெளியூர் அல்லது வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் சமீபமாக வந்தவர்கள் தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்பது உங்களை அவமானப்படுத்துவதற்கோ, டார்ச்சர் பண்ணுவதற்கோ இல்லை. உங்களுடைய பாதுகாப்புக்காக மட்டுமே.
உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோருடைய பாதுகாப்புக்காகத் தான். தயவு செய்து அரசாங்க உத்தரவை மீறாதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதை நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செய்தால் மட்டுமே, இந்த வைரஸுடன் சண்டையிட முடியும்"
இவ்வாறு த்ரிஷா பேசியுள்ளார்.