நாலு மாதத்தில் சிவாஜிக்கு ஹாட்ரிக் வெற்றி ; ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘அந்தமான் காதலி’, ‘தியாகம்’

நாலு மாதத்தில் சிவாஜிக்கு ஹாட்ரிக் வெற்றி ; ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘அந்தமான் காதலி’, ‘தியாகம்’
Updated on
2 min read

தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்து, ஹாட்ரிக் வெற்றியைச் சுவைத்தார் சிவாஜி. ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘அந்தமான் காதலி’ ‘தியாகம்’ என மூன்று படங்களில், ‘அண்ணன் ஒரு கோவில்’ சிவாஜியின் சொந்தப்படம்.
சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ‘அண்ணன் ஒரு கோவில்’ படத்தை எடுத்து, நடித்துக் கொண்டிருந்தார் சிவாஜி. அதேசமயத்தில், முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், ‘அந்தமான் காதலி’ படமும் தொடங்கியது. ’அண்ணன் ஒரு கோவில்’ படத்தை தீபாவளிக்கு திரையிட திட்டமிட்டார்கள்.
இதேபோல், ‘அந்தமான் காதலி’ படத்தையும் தீபாவளிக்குத் திரையிடத் திட்டமிட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டன. பின்னர், சிவாஜியின் தீபாவளி ரிலீஸ் திட்டத்தை அறிந்த முக்தா சீனிவாசன், ‘உங்க புரொடக்‌ஷன்ஸ் படம் தீபாவளிக்கு வரட்டும். ‘அந்தமான் காதலி’யை அடுத்தாப்ல ரிலீஸ் பண்ணிக்கலாம்’ என்று சொல்லிவிட்டார் முக்தா ராமசாமி.
அதன்படி, 1977ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி தீபாவளித் திருநாளில், ‘அண்ணன் ஒரு கோவில்’ திரைப்படம் ரிலீசானது. சிவாஜி, சுஜாதா, சுமித்ரா, ஜெய்கணேஷ் முதலானோர் நடித்த இந்தப் படத்துக்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமையத்தார். கே.விஜயன் இயக்கினார்.
அண்ணன் - தங்கைக் கதையுடன் திரில்லரையும் சேர்த்து சஸ்பென்ஸும் செண்டிமெண்டுமாகக் கலந்து கொடுத்த இந்தப் படத்தில், எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாகின.

‘மல்லிகை முல்லை’, ‘நாலு பக்கம் வேடனுண்டு, நடுவினிலே மானிரண்டு’, ‘அண்ணன் ஒரு கோவிலென்றால்’ என எல்லாப் பாடல்களும் மக்கள் மனதில் இடம் பிடித்தது.
அன்றைக்கு வந்த தீபாவளிப் படங்களில், இந்தப் படம் வசூலை வாரிக்குவித்தது.
நவம்பர் 10ம் தேதி ‘அண்ணன் ஒரு கோவில்’ வெளியானதை அடுத்து, 78ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று, முக்தா பிலிம்ஸின் ‘அந்தமான் காதலி’ வெளியானது. சிவாஜி, சுஜாதா, சந்திரமோகன் முதலானோர் நடித்தனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, முக்தா ராமசாமி தயாரிக்க, முக்தா சீனிவாசன் இயக்கினார். ‘நினைவாலே சிலை செய்து’, ‘ அந்தமானைப் பாருங்கள் அழகு’, ‘பணம் என்னடா பணம் பணம்’, என எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. படத்தின் கதை வசனத்தை பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் எழுதினார்.
இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதன் பின்னர், சிவாஜி, லட்சுமி, கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், விகே.ராமசாமி, படாபட் ஜெயலட்சுமி முதலானோர் நடிக்க, சுஜாதா சினி ஆர்ட்ஸ் பேனரில் கே.பாலாஜி தயாரித்தார். கே.விஜயன் இயக்கினார். இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. 78ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி ரிலீசான இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
ஜனவரி 26ம் தேதி, கே.பாலாஜியின் திருமண நாள். வழக்கமாக, வருடாவருடம் இந்தத் தேதியில் தான் தயாரித்த படத்தை ரிலீஸ் செய்யும் கே.பாலாஜி, ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘அந்தமான் காதலி’ ஆகிய படங்களால், இந்தப் படங்களை கொஞ்சம் தள்ளி ரிலீஸ் செய்யப்பட்டது. நவம்பரில் ஒரு படம், டிசம்பர் விட்டு ஜனவரியில் ஒரு படம், பிப்ரவரி விட்டு மார்ச்சில் ஒரு படம் என மூன்று படங்கள் வெளியாகின. ஆக, நான்கு மாதத்தில் சிவாஜியின் மூன்று படங்கள் வெளியாகி, மூன்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

.

இன்னொரு விஷயம்... நீண்டநாள் தயாரிப்புப் பணியில் இருந்து, தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது சிவாஜியின் ‘என்னைப் போல் ஒருவன்’ திரைப்படம். டி.ஆர்.ராமண்ணா இயக்கினார்.

பின்னர், இரண்டு வருடங்கள் கழித்து, ‘தியாகம்’ படத்துக்குப் பிறகுதான் வெளியானது. ’தியாகம்’ மார்ச் 4ம் தேதி ரிலீசானது. ‘என்னைப் போல் ஒருவன்’ மார்ச் 18ம் தேதி வெளியானது.
இந்தப் படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். இரட்டை வேடங்களில் சிவாஜி நடித்த இந்தப் படமும் நன்றாக இருந்தது. பாடல்களும் சூப்பர். ஆனாலும் சுமாரான வெற்றியையே பெற்றது. இல்லையேனில், மூன்று வெற்றியுடன் சேர்ந்து நான்காவது வெற்றியும் சுவைத்திருப்பார் சிவாஜி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in