

கரோனா தொற்றைக் கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இந்தக் காரணத்தால் தினசரி தொழிலாளர்கள் பலரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ரஜினி, அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்தனர். சிலர் அரிசி மூட்டைகளாகவும் உதவி செய்துள்ளனர். தற்போது இந்த உதவிகள் தொடர்பாக இன்று (ஏப்ரல் 8) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.
அச்சந்திப்பில் முதலாவதாகத் தமிழக மக்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஆர்.கே.செல்மவணி பேசினார். அதில், "கரோனாவைக் கவனித்தால் சாதாரணமான வியாதி. கவனிக்கவில்லை என்றால் அது நம் உயிரை எடுக்கிற வியாதி. தற்போதைக்கு மருந்து இல்லாததால், உலகத்தையே பயமுறுத்தக்கூடிய ஒரு வியாதியாக இருக்கிறது.
பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். கரோனா தொற்று வந்துவிட்டால் கட்டுப்படுத்த முடியாது. இந்தியா மாதிரியான வளரும் நாடுகளுக்கு கரோனா ஒரு மிகப்பெரிய பிரச்சினை. இந்தியாவில் 130 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்றால், ஆயிரம் பேருக்கு ஒரு வென்டிலேட்டர் கூட கிடையாது. இப்போது இருக்கும் நிலைமையின் படி 1 லட்சம் பேருக்கு ஒரு வென்டிலேட்டர் கூட இல்லை. இத்தாலி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட வென்டிலேட்டர் குறைபாடு இருக்கிறது.
கற்பனையாக நாம் சந்தித்த விஷயத்தை இன்று உலகமே சந்தித்துக் கொண்டிருக்கிறது. வளர்ந்த நாடுகளில் கூட இதைத் தாங்க முடியாமல் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மக்களிடையே இந்த கரோனா தொற்றை வராமல் தடுத்தால் மட்டுமே, இந்தியாவைக் காப்பாற்ற முடியும். அனைவருடைய பங்கும் இதில் இருக்கிறது.
பரவாமல் தடுப்பது மட்டுமே இந்த தேசத்துக்கு செய்யக்கூடிய ஒரு நல்ல விஷயம். மக்கள் பலரும் இந்த ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். தமிழக மக்கள், தமிழக அரசு ஆகியோருக்கு நன்றி” என்று பேசினார் ஆர்.கே.செல்வமணி.