

மிஷ்கின் கதைகள் வலிமையானவை என்று அதிதி ராவ் தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சைக்கோ'. இளையராஜா இசையமைப்பில் வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அதிதிக்கு பல்வேறு தமிழ் இயக்குநர்களும் கதைகளைக் கூறி வருகிறார்கள். இதனிடையே இன்று (ஏப்ரல் 7) தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார். இதனால் #AskAditi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது.
இந்தக் கேள்வி -பதிலில், "உங்களுடைய நடிப்பில் சவாலான கதாபாத்திரம்?” என்ற கேள்விக்கு, "கடைசியாக என்றால் 'சைக்கோ'. மிகவும் பயங்கரமாகவும், அதிக அழுத்தமாகவும் இருந்தது" என்று பதிலளித்துள்ளார்.
மேலும், மிஷ்கினுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும், தாஹினி கதாபாத்திரம் குறித்த கேள்விக்கும் அதிதி ராவ் பதிலளிக்கையில், "மிஷ்கின் சார் தனித்துவமான பார்வை கொண்டவர். அவருடைய கதைகள் வலிமையானவை. ’சைக்கோ’வின் உந்து சக்தி மற்றும் உணர்வுபூர்வமான தொடர்பு தாஹினி. அந்தப் பாத்திரத்தில் நான் நடித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.