

கரோனா வைரஸ் பாதிப்புக்கு, மொத்தமாக அஜித் 1 கோடி 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 4500-ஐ நெருங்குகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.
படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்குத் திரையுலகினர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
முன்னணி திரையுலகப் பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் சிவகார்த்திகேயன் மட்டுமே முதல்வர் நிவாரண நிதி மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு என இரண்டுக்குமே நிதியுதவி வழங்கியுள்ளார்.
தற்போது தமிழ்த் திரையுலகில் முதல் நடிகராக, பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி மற்றும் பெப்சி என அனைத்துக்குமே அஜித் நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் என நிதியுதவி கொடுத்துள்ளார்.
இவை அனைத்துமே சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் இன்று (ஏப்ரல் 7) அஜித் தரப்பில் செலுத்தப்பட்டுள்ளது.