கரோனா தொற்று முடிவுக்கு வந்தவுடன் நாட்டின் நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?- காஜல் அகர்வால் யோசனை

கரோனா தொற்று முடிவுக்கு வந்தவுடன் நாட்டின் நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?- காஜல் அகர்வால் யோசனை
Updated on
1 min read

கரோனா தொற்று முடிவுக்கு வந்தவுடன் நாட்டின் நலனுக்குச் செய்ய வேண்டியது என்ன என்பதை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், தினமும் புதிதாகப் பலரும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது, 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்தியா முழுக்க எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை.

இதனிடையே, படப்பிடிப்புகள் இல்லாததால் திரையுலக பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பேசி விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது, கரோனா தொற்று அழிந்தவுடன் நாட்டு நலனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

”கரோனா தொற்று அழியும்போது, ஆபத்து முடியும்போது, நமது நாட்டின் நலனுக்காக ஏதாவது ஒன்றைச் செய்வோம். இந்தியாவில் நமது விடுமுறைகளைச் செலவிடுவோம், நம் பகுதியிலிருக்கும் உணவகங்களில் சாப்பிடுவோம், நமது பகுதியில் காய்கறி, பழங்களை வாங்குவோம்,

இந்திய உற்பத்தியாளர்களின் துணிகளை, காலணிகளை வாங்கி உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவு தருவோம். நமது உதவியின்றி இந்த வியாபாரிகள் மீண்டும் எழுந்து நிற்கக் கஷ்டப்படுவார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து, முன்னேற நமது பங்கை நாம் செய்வோம்”

இவ்வாறு காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in