

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையைக் காட்டுவோம் என்று பிரதமர் விடுத்த வேண்டுகோளுக்கு நடிகர் ஜீவா ஆதரவளித்துள்ளார்
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதனிடையே பிரதமர் மோடி ஏப்ரல் 3-ம் தேதி காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார்.
ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளை ட்விட்டரில் தமிழ் பயனர்கள் பலரும் மீம்ஸ்கள் போட்டு கிண்டல் செய்தார்கள், மேலும், தமிழ்ப் படங்களில் ஒளியேற்றுவது தொடர்பான காமெடி காட்சிகளையும் பகிர்ந்தார்கள்.
தற்போது முன்னணி நடிகரான ஜீவா, பிரதமரின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:
"எல்லாருக்கும் வணக்கம். இந்த உலகத்தையே அச்சுறுத்தி வருகிற கரோனா கொடிய வைரஸை ஒற்றுமையாக இருந்து துரத்தி அடிப்போம் என்று அனைவருக்கும் நம்பிக்கை கொடுப்பதற்காக மக்கள் எல்லாரையும் தீபங்கள் ஏற்ற வேண்டுமென்று நமது பிரதமர் மோடி அவர்கள் அழைத்திருக்கிறார்.
ஒரு நாள் மக்கள் ஊரடங்கு அன்று மருத்துவர்களுக்கு நன்றிச் சொல்ல நாம் காட்டிய அதே ஒற்றுமையை இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைவரும் அவர்களுடைய வீட்டில் தீபங்கள் ஏற்றியோ, மெழுகுவர்த்தி ஏற்றியோ இல்லையென்றால் நமது செல்போன் டார்ச்லைட்டை ஒளிரவிட்டோ இந்த கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையைக் காட்டுவோம். சமூக விலகலை கடைப்பிடிப்போம், கரோனாவை வீழ்த்துவோம்"
இவ்வாறு ஜீவா தெரிவித்துள்ளார்.