

பாதுகாக்கப் போகும் படம். வழிவிடுமா காலம்? என்று விஜய் சேதுபதியுடன் இணையவுள்ள படம் தொடர்பாக சேரன் குறிப்பிட்டுள்ளார்.
'திருமணம்' படத்துக்குப் பிறகு, இயக்குநர் சேரன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அந்தக் கதையைப் பல முன்னணி நடிகர்களிடம் கூற நேரம் கேட்டும் யாரும் நேரம் ஒதுக்கவில்லை என்று கடுமையாகச் சாடினார்.
இதனிடையே சேரனுக்கு இருந்த பணப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், விஜய் சேதுபதி நடிப்பதற்குத் தானாகத் தேதிகள் வழங்கினார். இதனால், பல மேடைகளில் விஜய் சேதுபதியை மிகவும் பெருமையாகப் பேசினார் சேரன்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராகப் போகச் சொன்னது கூட விஜய் சேதுபதிதான். இதனை அந்நிகழ்ச்சியில் இருக்கும்போது சேரன் தெரிவித்தார். இதனால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன், விஜய் சேதுபதி படத்தை சேரன் தொடங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படாமல் இருக்கிறது.
இதனிடையே, சேரன் இயக்கத்தில் வெளியான படங்களைப் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுப் பாராட்டுபவர்களுக்கு உடனடியாக பதிலளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது, 'தவமாய் தவமிருந்து' படத்தைப் பார்த்துவிட்டு, "மனிதனின் சராசரி ஆயுட்காலம் 56 ஆண்டுகள். ஆனால் வாழும் நேரங்கள் என்னவோ மிகக் குறைவுதான். அந்த மணித்துளிகளை மனது பத்திரமாகச் சேகரித்துக் கொள்ளும். அப்படியான நேரங்கள் ஏதேனும் ஒன்றில், 'தவமாய் தவமிருந்து' படம் உள்ளுறைந்திருக்கும். அத்தகைய ஆற்றல் கொண்டது அந்த ஆக்கம். நன்றி சார்” என்று சேரனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுத் தெரிவித்தார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக சேரன், " ‘தவமாய் தவமிருந்து’ போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய் சேதுபதியுடன் இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாக்கப் போகும் படம். வழி விடுமா காலம்" என்று பதிவிட்டுள்ளார்.