

ஓய்வின்றி ஓடியதற்கு, இப்போது குடும்பத்துடன் பேசக் கிடைத்த நேரம் இது என்று யோகி பாபு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதனால் எந்தவொரு பணியுமே நடைபெறவில்லை. படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் திரையுலகப் பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளே முடங்கி இருக்கிறார்கள். தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக வீடியோக்கள் வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த தருணத்தில் யோகி பாபு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, "நாளை திருமண வரவேற்பு நடப்பதாக இருந்ததைத் தள்ளி வைத்துவிட்டேன். இப்போதைக்கு குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அம்மா, தங்கச்சி, மச்சான், தம்பி என அனைவருடனும் நீண்ட நாட்கள் கழித்து மனம் விட்டுப் பேச நாட்கள் கிடைத்துள்ளன.
ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, இப்போது குடும்பத்துடன் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. சிவாஜி சார் நடித்த 'கர்ணன்' பார்த்தேன், நேற்று விசு சாருடைய 'சம்சாரம் அது மின்சாரம்' பார்த்தேன். அதேபோல் குடும்பத்துடன் சேர்ந்து கீர்த்தி மேடம் நடித்த 'நடிகையர் திலகம்' பார்த்தோம்" என்று தெரிவித்தார்.
மேலும், கரோனா வைரஸ் அச்சத்தால் ஏற்பட்டுள்ள முடக்கம் பலரையும் பாதித்துள்ளது. அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யவுள்ளீர்களா என்ற கேள்விக்கு, "இந்த வைரஸ் தாக்குதலால் கஷ்டப்படுபவர்கள் மேலும் கஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சினிமாவில் இருக்கும் தொழிலாளர்கள் மட்டுமன்றி, நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருமே கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நமக்கே வேலை செய்துவிட்டு, வீட்டிற்குள் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
ஆனால், அவர்களுக்கோ அன்றைக்கு உழைத்தால் அன்றைக்குச் சாப்பாடு என்ற நிலை. கண்டிப்பாக அனைவரும் சேர்ந்து அவர்கள் மாதிரியான ஆட்களுக்கு உதவி செய்ய வேண்டும். நானும் என்னால் முடிந்த உதவியைச் செய்து கொண்டிருக்கிறேன். வீட்டிற்குள் அனைவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தாலும், வெளியே உயிருக்கு ஆபத்தான விஷயம் போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். யோகி பாபு