

மிகவும் பிரபலமான 'லொள்ளு சபா' நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாகும் என்று விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.இதனால் சின்னதிரை, வெள்ளித்திரை என எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இந்த ஊரடங்கால் பெரும் சிரமத்துக்கு உள்ளனா திரையுலகின் தினசரி தொழிலாளர்களுக்கு, திரையுலக பிரபலங்கள் பலரும் உதவிகள் செய்து வருகிறார்கள்.
படப்பிடிப்பு நடைபெறாத காரணத்தால், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் சிக்கலுக்கு உள்ளானது. அடுத்டுத்த அத்தியாயங்களின் படப்பிடிப்பு நடத்தப்படாததால், பல சீரியல்கள் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களும் வீட்டிற்குள்ளேயே இருப்பதால், தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களுடைய தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பழைய சீரியல்கள் அனைத்தையும் ஈண்டும் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளனர். 'மெட்டி ஒலி', 'தங்கம்', 'சின்ன தம்பி', 'சக்திமான்' உள்ளிட்ட பல சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதையொட்டி, விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்தது. இதை பலரும் விஜய் தொலைக்காட்சியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுத் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி மீண்டும் 'லொள்ளு சபா' நிகழ்ச்சி தினமும் காலை 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர்.
சந்தானம், ஜீவா, மனோகர், சுவாமி நாதன், உதய், ஈஸ்டர், சாஷா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியின் மூலமே பிரபலமானார்கள். ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொண்டு அதன் காட்சிகளை வைத்து உருவாக்கப்பட்ட கலாய்ப்பு நிகழ்ச்சி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.