

கரோனா தொற்று நிவாரணத்துக்கு பல்வேறு நட்சத்திரங்களும் நிதி கொடுத்து வரும் நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் தன் பங்குக்கு நிதி திரட்டி வருகிறார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறையைச் சேர்ந்த தினக்கூலி பணியாளர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி உட்பட பல்வேறு பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தனது எஸ்பிபி நண்பர்கள் அறக்கட்டளையின் மூலமாக நிதி திரட்ட ஆரம்பித்துள்ளார். கடந்த 12 வருடங்களாக இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
தனது சமூக வலைதளப் பக்கம் மூலமாக தான் நிதி திரட்டும் அறிவிப்பை எஸ்பிபி வெளியிட்டுள்ளார். குறைந்தபட்சம் ரூ.100 நிதி தருமாறு எஸ்பிபி தனது ரசிகர்களையும், பொதுமக்களையும் கோரியுள்ளார். மேலும், இந்த அறக்கட்டளைக்கு நிதி தந்தவர்கள் எஸ்பிபியிடன் ஒரு பாடலைப் பாடச் சொல்லிக் கேட்கலாம். அதை அவர் பதிவு செய்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்கிறார். இதுவரை இந்த அறக்கட்டளை மூலமாக ரூ.4.75 லட்சத்தை எஸ்பிபி திரட்டியுள்ளார்.
முன்னதாக, எஸ்பிபி கரோனா தொற்று விழிப்புணர்வு பற்றி தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சொந்தமாக ஒரு பாடலை உருவாக்கிப் பாடினார். இதில் தமிழ் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.