

'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு, விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்தது.
'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தப் படத்தில் அவரது லுக்கும் மற்றும் அவரது கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவும் வெளியிடப்பட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனை வைத்து பல்வேறு செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன.
அதில் ஒரு செய்தி என்னவென்றால், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் மற்றும் மோகன்லால் இருவரிடமும் படக்குழுவினர் பேசியிருப்பதாகவும், இவர்களுடைய காட்சிகள் மே மாதம் படமாக்க ராஜமெளலி திட்டமிட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்த போது, "எப்படி இப்படியான செய்திகள் வெளியாகிறது எனத் தெரியவில்லை. இதில் எந்தவித உண்மையும் இல்லை. இது தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் கூட நடக்கவில்லை" என்று தெரிவித்தார்கள். இதன் மூலம் இந்தச் செய்தி வழக்கம் போல் வதந்தி என்பது உறுதியாகிறது.