

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் மீண்டும் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவாகியுள்ளது.
விஷால் - சுந்தர்.சி இருவருமே நெருங்கிய நண்பர்கள். இருவரது கூட்டணியில் 'மதகஜராஜா', 'ஆம்பள', 'ஆக்ஷன்' ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இதில் இந்தக் கூட்டணி முதலில் இணைந்த 'மதகஜராஜா' திரைப்படம் இப்போது வரை வெளியாகவில்லை.
இறுதியாக பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'ஆக்ஷன்' திரைப்படம் வரவேற்பைப் பெறவில்லை. பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து படம் பண்ண முடிவு செய்துள்ளனர்.
இந்த முறை ஆக்ஷன் களமாக இல்லாமல், சுந்தர்.சியின் வழக்கமான காமெடி பின்னணியில் பண்ணலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை முடிவுற்றாலும், இன்னும் ஒப்பந்தமாகக் கையெழுத்தாகவில்லை.
தற்போது 'சக்ரா' மற்றும் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்குவார் எனத் தெரிகிறது.