திரையரங்கில் படம் பார்ப்பதுதான் சிறந்த அனுபவம்: தியாகராஜன் குமாரராஜா

திரையரங்கில் படம் பார்ப்பதுதான் சிறந்த அனுபவம்: தியாகராஜன் குமாரராஜா
Updated on
1 min read

திரையரங்கில் படம் பார்ப்பதுதான் சிறந்த அனுபவம் என்று இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார்

கரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுக்க திரையுலக பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அனைவருமே தொலைக்காட்சியைத் தாண்டி ஹாட் ஸ்டார், அமேசான், நெட் ஃபிளிக்ஸ் என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் படங்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் பல்வேறு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையதளங்கள், தங்களுடைய இணையத்தில் சில நாட்களுக்கு HD-ல் படங்களைக் காண முடியாது என அறிவித்துள்ளனர்.

ஆனால் 'ஆரண்ய காண்டம்' மற்றும் 'சூப்பர் டீலக்ஸ்' படங்களின் இயக்குநரான தியாகராஜன் குமாராஜா, தனக்குத் திரையரங்கில் படம் பார்ப்பது தான் சிறந்த அனுபவம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"அடிக்கடி பெரிய திரையில் படம் பார்ப்பவன் நான். என் நண்பர்கள் பார்க்கச் செல்லும்போது அவர்கள் எதாவது சிறிய திரையில் காட்டினால் பார்ப்பேன். நெட்ஃபிளிக்ஸ் போன்ற கணக்குகள் வைத்துக்கொள்ளாமல் போனதற்கு முக்கியக் காரணம் எனக்கு நேரமில்லை என்பதுதான். பெரிதாக எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் படம் பார்க்க நேரம் கிடைப்பதில்லை. நீங்கள் எதில் வேண்டுமானாலும் படம் பார்க்கலாம் ஆனால் திரையரங்கில் படம் பார்ப்பதுதான் சிறந்த அனுபவம் என்பது என் கருத்து.

ஒரு பெரிய மக்கள் கூட்டத்துடன் படம் பார்ப்பதும், தனியாகப் படம் பார்ப்பதும் ஒன்றல்ல. எந்தப் படமாக இருந்தாலும் திரையரங்கில் பார்ப்பதற்கும், வீட்டில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கும். அந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கலாம். ஆனால் அதே படத்தை ஒரு பெரிய கூட்டத்துடன் பார்க்கும்போது கிடைக்கும் உற்சாகம் வீட்டில் கிடைக்காது. கூட்டத்துடன் படம் பார்க்கும்போது ஒரு குழந்தை போன்ற மனநிலையில் படம் பார்க்கிறோம். அதனால் சில விஷயங்கள் ஏற்புடையதாகத் தோன்றும்"

இவ்வாறு தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in