

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது.
ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' படத்தின் மூலம் அறியப்பட்டவர் ரம்யா பாண்டியன். அதற்குப் பிறகுச் சரியான திரையுலக வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், தன் வீட்டின் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டின் மூலம் பிரபலமானார்.
அதற்குப் பிறகு அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் வந்தது. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அதில் மேலும் பிரபலமானார். தற்போது இவருக்கென்று தனி ரசிகர்கள் வட்டம் சமூகவலைதளத்தில் இருக்கிறது.
ஆனால், திரையுலகில் கவனம் செலுத்தாமலேயே இருந்தார். தற்போது கரோனா முன்னெச்சரிக்கையால் வீட்டிற்குள்ளேயே இருப்பதால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது உங்களுடைய அடுத்த படங்கள் என்ற கேள்விக்கும், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திலும், சிவிகுமார் தயாரிக்கவுள்ள படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகப் பதிலளித்துள்ளார். இதன் மூலம் இவருடைய ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.