படம் இயக்குவதற்கான உந்துதல் யார்? - தியாகராஜன் குமாரராஜா பதில்

படம் இயக்குவதற்கான உந்துதல் யார்? - தியாகராஜன் குமாரராஜா பதில்
Updated on
1 min read

தான் படம் இயக்குவதற்கான உந்துதல் யார் என்ற கேள்விக்கு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பதிலளித்துள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட இந்தப் படம் வெளியாகி இன்றுடன் (மார்ச் 29) ஓராண்டு ஆகிறது. இந்தப் படம் தொடர்பாக இப்போது வரை யாரேனும் ஒருவர் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

இதனிடையே ஓராண்டை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் தியாகராஜா. இதில் நீங்கள் இயக்குநராக நினைப்பதில்லை என்று முன்பு கூறியிருக்கிறீர்கள் ஏன் என்ற கேள்விக்கு, "ஆம். நான் உட்கார்ந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். அதுதான் மிகப்பெரிய மகிழ்ச்சி என்று நினைக்கிறேன். திரைப்படம் உருவாக்குவதும் அதற்கான வழிகளில் ஒன்றுதான்" என்று பதிலளித்துள்ளார் தியாகராஜன் குமாரராஜா

மேலும், திரைப்படம் இயக்க உங்களுக்கு உந்துதல் (இன்ஸ்பிரேஷன்) என்றால் யார் என்ற கேள்விக்கு, "கேட்கும் சுவாரசியமான கதையை, கேள்விப்படும் சுவாரசிய நிகழ்வுகளைச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் தான் முதல் உந்துதல். ஒரு கதையை நாம் கேட்டு இன்னொருவரிடம் சொல்லும்போதே அதில் நம் பார்வை சேர்ந்திருக்கும்.

அந்தத் திறமையை இன்னும் பட்டை தீட்ட வேண்டும் என்று நினைப்போம். ஒரு கதையைத் திரைக்காகத் தழுவி எடுக்கும் சவால் என்பதும் ஒரு வகையில் உந்துதல். இசை இருப்பவற்றில் மிகப்பெரிய உந்துதல்.

இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். நான் கேட்ட கதைகளுக்கு ஈடானது நான் கேட்ட, கேட்டுக் கொண்டிருக்கும் இசையும். பிரதானமாக இளையராஜாவின் இசை. ஏனென்றால் அதைக் கேட்டுத்தான் வளர்ந்திருக்கிறேன்.

எம்.எஸ்.விஸ்வநாதன் எனது மிகப்பெரிய உந்துதல்களில் ஒருவர். அந்த இசையின் சுவையைத் திரையில், காட்சிகளாக மாற்றுவதைத்தான் நான் செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் தியாகராஜன் குமாரராஜா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in