

சிலரை எனக்காகக் கதை எழுதச் சொல்லியிருக்கிறேன் என்று கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், தர்ஷன், ரீத்து வர்மா, நிரஞ்சனா அகத்தியன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் கவுதம் மேனனின் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளது. தற்போது பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தனது நடிப்பு உலகப் பயணம் குறித்து, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் கவுதம் மேனன். அதில் ஒரு இயக்குநராக உங்களுக்கான கதாபாத்திரம் எழுத ஆசைப்பட்டுள்ளீர்களா என்று கேள்விக்கு, "இல்லை. ஆனால் ஒரு சிலரை எனக்காக, எனக்குத் தோதாக இருக்கும்படி முழு நீளக் கதை ஒன்றை எழுதச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் கவலை இல்லை" என்று பதிலளித்துள்ளார் இயக்குநர் கவுதம் மேனன்.
மேலும், "மணிவண்ணன், மனோபாலா, சுந்தர்ராஜான் போன எண்ணற்ற இயக்குநர்கள் வெற்றிகரமான நடிகர்களாக மாறியுள்ளனர். ஒருவேளை அது எளிதான வேலை. மேலும் படத்தின் வெற்றி/தோல்வி குறித்து யாரும் உங்களைப் பழி சொல்ல மாட்டார்கள் என்பதாலோ?” என்ற கேள்விக்கு கவுதம் மேனன் "நான் அப்படிப் பார்க்கவில்லை.
இயக்குநர்களாக அவர்கள் கடைசிக் கட்டத்தில் இருக்கும்போது அப்படி நடிகர்களானார்கள். அது ஒரு மாற்றலைப் போல. எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்கள் திரைப்படம் எடுக்க விரும்புகிறேன். அப்படியே நல்ல வாய்ப்பு வந்தால் நடிக்கவும் விருப்பம்" என்று தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்