

எல்லாவற்றையும் அரசியலாக்க வேண்டுமா என்று ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு நடிகர் சுரேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
நாடு முழுவதும் 21 நாட்கள் முழு அடைப்பு அமலில் உள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து மாநிலங்களும் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன. இதனால் புலம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் எல்லைகளில் தவிக்கின்றனர்.
குறிப்பாக டெல்லி - உத்தரப் பிரதேசத்தின் காசிபூர் எல்லையில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி எல்லையில் தொழிலாளர்கள் காத்திருக்கும் வீடியோவைப் பகிர்ந்து, "இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சகோதர சகோதரிகள் வேலையில்லாமலும் நிச்சயமில்லாத எதிர்காலத்தையும் எதிர்நோக்கி தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு இந்தியக் குடிமகனுக்கு இப்படி நடக்க அனுமதித்ததற்கும், பொதுமக்களின் இந்த இடம்பெயர்வுக்கு அரசிடம் எந்தவொரு எதிர்காலத் திட்டமும் இல்லதாதற்கும் நாம் வெட்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தப் பதிவை நடிகர் சுரேஷ் கடுமையாகச் சாடியுள்ளார். ராகுல் காந்தியின் ட்வீட்டைக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பதிவில், "இத்தகைய குழப்பமான மற்றும் பீதியான சூழலில் கூட உங்கள் குடும்பம் எல்லாவற்றையும் அரசியலாக்க வேண்டுமா? உங்களுடைய கண்ணியக் குறைவான நடத்தையை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.