பரவிய வதந்தி: கௌதமி மறைமுக விளக்கம்

பரவிய வதந்தி: கௌதமி மறைமுக விளக்கம்
Updated on
1 min read

தன்னைப் பற்றி பரவிய வதந்திக்கு, கௌதமி தனது ட்விட்டர் பதிவில் மறைமுகமாக விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தால் அவர்கள் வீட்டின் வாசலில் நோட்டீஸ் ஒட்டி வருகிறது சென்னை மாநகராட்சி. அதில் அவர் எவ்வளவு காலத்துக்குத் தனிமைப்படுத்தப்படுவார், பெயர் மற்றும் முகவரி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

இந்த நோட்டீஸ் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. அதில் கமலின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனால், கமலுக்கு கரோனா தொற்று இருப்பதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு கமல் மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், கௌதமியின் பாஸ்போர்ட்டில் ஆழ்வார்பேட்டை முகவரி இருப்பதால்தான் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள் என்று தகவல் பரவியது. இது தொடர்பாகப் பல்வேறு செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி வந்தன.

இது தொடர்பாக கௌதமி தனது ட்விட்டர் பதிவில், "அனைவருக்கும் காலை வணக்கம். நான் வீட்டில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். 20 நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பினேன். நீங்கள் அனைவரும் உங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட விதிகளைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த நேரத்தைச் சிறப்பாகவும் நல்லவிதமாகவும் பயன்படுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

எந்தவொரு செய்திக்கும் நேரடியாக விளக்கம் அளிக்காமல், வீட்டில் பத்திரமாக இருக்கிறேன் என்று கௌதமி மறைமுகமாக விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in