சண்டைக் காட்சியில் நடிக்க மறுத்த கௌதம் மேனன்: பின்னணி என்ன?

சண்டைக் காட்சியில் நடிக்க மறுத்த கௌதம் மேனன்: பின்னணி என்ன?
Updated on
1 min read

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் நடிக்க மறுத்ததாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், தர்ஷன், ரீத்து வர்மா, நிரஞ்சனா அகத்தியன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் கௌதம் மேனனின் நடிப்புக்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளது. தற்போது பல்வேறு படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் கௌதம் நடித்து வருகிறார்.

தனது நடிப்புப் பயணம் குறித்து, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் கௌதம் மேனன். அதில் நடிக்கும்போது கதையில் ஏதேனும் யோசனைகள் சொல்வீர்களா என்ற கேள்விக்கு கௌதம் மேனன் கூறியிருப்பதாவது:

"இல்லை, ஒரு நடிகராக எனக்குத் தோதான ஒரு சூழலிலிருந்து வெளியே வரவேண்டும் என்ற சூழலில் மட்டும் சொல்லியிருக்கிறேன். 'ட்ரான்ஸ்' படத்தின் க்ளைமாக்ஸில் எனது கதாபாத்திரம் கொல்லப்படும். அதை க்ளோஸ் அப்பில் எடுத்தார்கள். நான் முக பாவனை காட்ட வேண்டியிருந்தது. அது எனக்குக் கடினமாக இருந்தது. அதற்கு மாற்றாக ஒன்றைச் சொன்னேன்.

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் காரிலிருந்து இறங்கி என்னைத் துரத்திக் கொண்டிருக்கும் ரவுடிகளிடம் பேச வேண்டும். வேஷ்டி கட்டிக்கொண்டு நான் சண்டையிடுவதைப் போல முதலில் திட்டமிட்டிருந்தார்கள். அது ஒரு மாஸ் ஹீரோவுக்கு எழுதும் அறிமுகக் காட்சி.

தேசிங் அதை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் அதற்கு மாற்று சொன்னேன். பிறகு இப்போது இருக்கும் காட்சியை எழுதினார். விமான நிலையத்தில் ஒரு சண்டைக் காட்சியும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் அது போலக் கைகலப்பில் ஈடுபடமாட்டார் என்று தன்மையாகச் சொன்னேன். அதைக் கனிவாக ஏற்றுக்கொண்டார்"

இவ்வாறு கௌதம் மேனன் பதிலளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in