

'36 வயதினிலே' படத்தைத் தொடர்ந்து லாரன்ஸ் இயக்கவிருக்கும் 'நாகா' படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
திருமணத்துக்கு பிறகு ஜோதிகா மீண்டும் நடித்த படம் '36 வயதினிலே'. சூர்யா தயாரித்திருந்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது. மக்களிடையே வரவேற்பைப் பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா வேறு எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.
சூர்யா - ஜோதிகா இணைந்து நடிக்க பல்வேறு இயக்குநர்கள் கதை கூறிவந்தார்கள். அதில் ஒரு கதை சூர்யாவுக்கு பிடித்திருக்க, அதை முழுமைப்படுத்தி கொண்டு வருமாறு தெரிவித்திருக்கிறார்கள். இத்தகவலை சூர்யாவே உறுதிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லாரன்ஸ் 'நாகா' மற்றும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' ஆகிய இரண்டு படங்களை வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்காக இயக்க இருக்கிறார். இதில் 'நாகா' படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். விரைவில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுவார் என்கிறது படக்குழு.