Published : 27 Mar 2020 12:50 PM
Last Updated : 27 Mar 2020 12:50 PM

சேதுராமன் திடீர் மறைவு: திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல்

சேதுராமனின் திடீர் மறைவால், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை ட்விட்டர் பதிவில் வெளியிட்டு வருகிறார்கள்.

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சேதுராமன் நேற்றிரவு (மார்ச் 26) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 37. நடிகராக மட்டுமன்றி, தோல் சிகிச்சை மருத்துவராகவும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம். இவரது திடீர் மறைவு பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேதுராமன் மறைவு தொடர்பாக திரையுலக பிரபலங்கள் வெளியிட்டுள்ள ட்வீட்கள்:

சந்தானம்: எனது அன்பு நண்பர் டாக்டர் சேதுவின் மறைவை அறிந்து அதிக அதிர்ச்சியும், மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

அனிருத்: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சேது. அதிர்ச்சியில் இருக்கிறேன். மிகவும் கனிவான, மென்மையான ஆன்மா. விரைவில் நம்மைப் பிரிந்துவிட்டார்

சாக்‌ஷி அகர்வால்: டாக்டர் சேதுவின் மறைவைக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளேன். அவரது குடும்பத்துக்கு என் அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

ஜெயம் ரவி: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சேது. இன்னமும் அதிர்ச்சியில் இருக்கிறேன், செய்தியை ஏற்கமுடியாமல் மறுக்கிறேன். அற்புதமான மனிதர். அவரது இழைப்பைத் தாண்டி வர அவரின் அழகான குடும்பத்துக்கு வலிமை கிடைக்கட்டும். அதற்கு என் பிரார்த்தனைகள்.

இயக்குநர் திரு: நம்ப முடியவில்லை டாக்டர் சேது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

காயத்ரி ரகுராம்: எனது நெருங்கிய நண்பர் நடிகர், டாக்டர் சேது மறைந்தது கேட்டு அதிர்ந்துவிட்டேன். விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஓம் ஷாந்தி. என்னால் நம்பமுடியவில்லை.

க்ரிஷ்: அதிர்ச்சிகரமான செய்தி. மிகவும் நல்ல மனிதர்களில் ஒருவர் நடிகர், டாக்டர் சேது. நாம் சில அற்புதமான நேரங்களைக் கழித்திருக்கிறோம் என் நண்பா. அவரது குடும்பத்துக்கும், நெருக்கமானவர்களுக்கும் என் அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சகோதரா.

ஜெ.அன்பழகன்: மாரடைப்பின் காரணமாக டாக்டர் சேதுராமன் மறைந்தது குறித்து மனம் தளர்ந்துவிட்டேன். இந்த உலகத்திலிருந்து மறைய 36 என்பது மிகவும் இளம் வயது. அன்பு மனம் கொண்டவர்களில் சேதுவும் ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்.

விஷாகா சிங்: இது ஒரு புரளியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தேன். ஆனால் இது உண்மை. ஆன்மா சாந்தியடையட்டும் சேது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படப்பிடிப்பில் பல நினைவுகள். இதை எழுதும்போது அவ்வளவு சோகத்திலும், அதிர்ச்சியிலும் இருக்கிறேன். உங்கள் குடும்பத்துக்குக் கடவுள் வலிமை தரட்டும்.

தனஞ்ஜெயன்: மாரடைப்பு காரணமாக இளம் டாக்டர் சேதுராமன் மறைந்தது அதிக அதிர்ச்சியைத் தருகிறது. இளம் வயதில் மிகக் குரூரமான முடிவு. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சேதுராமன்.

சேரன்: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் டாக்டர் சேதுராமன். இளம் வயது ஆனால் மாரடைப்பு அவரை சாகடித்துவிட்டது. என்ன வாழ்க்கை இது?

சிபிராஜ்: டாக்டர் சேதுராமனின் திடீர் மறைவு குறித்து கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஒரு நல்ல நண்பர், அற்புதமான மனிதர். வாழ்க்கை நியாயமின்றி இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

ஐஸ்வர்யா ராஜேஷ்: அதிர்ச்சியடைந்து விட்டேன். சீக்கிரம் (நம்மை) பிரிந்துவிட்டார். அவ்வளவு இனிமையான மனிதர் அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

சதீஷ்: வருத்தமான செய்தி. நடிகர், மருத்துவர் சேதுராமன் மாரடைப்பின் காரணமாக சில மணி நேரங்களுக்கு முன் மறைந்து விட்டார். அவரது குடும்பத்துக்கு என் அனுதாபங்கள். ஆன்மா சாந்தியடையட்டும்.

குஷ்பு: டாக்டர் சேதுராமன் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து முற்றிலும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்திருக்கிறேன். இளம் வாழ்க்கை விரைவில் முடிந்துவிட்டது. அவரது புன்னகை எப்போதும் அவர் கண்களில் மிளிரும். அற்புதமான ஆன்மா. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். நீங்கள் எப்போதும் என் நினைவில் இருப்பீர்கள். அவரது குடும்பம், மனைவி மற்றும் குழந்தைக்கு என் ஆறுதலைக் கூறிக்கொள்கிறேன். அவர் தான் எனது தோல் சிகிச்சை நிபுணர். இங்கு நிலைமை சரியாக இருக்கிறதா என்று கேட்க இரண்டு நாட்கள் முன்னால் அழைத்திருந்தார். எப்போதும் புன்னகையுடன் இருப்பவர், அதிர்ந்து பேசாதவர், மிகச் சிறந்த மருத்துவர். அதை விடச் சிறந்த மனிதர். அவரது மகளைச் சுற்றித்தான் அவரது உலகம் இருந்தது. அவர் மகளும் அவரோட மருத்துவமனையில் இருப்பார். பாவம் அவர் மனைவி.

லோகேஷ் கனகராஜ்: டாக்டர் சேதுராமனின் மறைவைக் கேள்விப்பட்டது கோரமான விஷயம். அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்

கதிர்: அதிர்ச்சியாக உள்ளது. வாழ்க்கை நிச்சயமற்றது. சேது சகோதரா உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்துக்கு என் ஆறுதல் மற்றும் பிரார்த்தனைகள்

விஷ்ணு விஷால்: டாக்டர் சேதுவின் மறைவு செய்தியைப் பார்த்து மனமுடைந்துவிட்டது. அவ்வளவு இனிமையான, உற்சாகமான மனிதர். வாழ்க்கை யூகிக்க முடியாத ஒன்று. நிபந்தனையின்றி அன்பு செலுத்துங்கள்.

பிரசன்னா: கண் விழித்ததும் மனமுடையும் செய்தி. கோவையில் அவரது கல்லூரி நாட்களிலிருந்தே டாக்டர் சேதுவை எனக்குத் தெரியும். அவ்வளவு சுறுசுறுப்பானவர். அவருக்கு மாரடைப்பு, அவர் மறைந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. என்ன ஒரு நிச்சயமற்ற வாழ்க்கை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x