வெப் சீரிஸில் கால் பதிக்கும் சத்யராஜ்
பல்வேறு முன்னணி நடிகர்கள் வெப் சீரிஸ் உலகில் அறிமுகமாகி வரும் வேளையில், சத்யராஜும் புதிதாக ஒரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது உலகளவில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஹாலிவுட் தொடங்கி பாலிவுட் என முன்னணி பிரபலங்கள் பலரும் வெப் சீரிஸில் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் இன்னும் முன்னணி நடிகர்கள் பலரும் வெப் சீரிஸில் உலகில் அடியெடுத்து வைக்கவில்லை. நடிகைகளில் சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் வெப் சீரிஸ் உலகில் அடியெடுத்து வைத்துவிட்டார்கள்.
தற்போது தாமிரா இயக்கவுள்ள புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சத்யராஜ். இதன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ’The Perfect Husband' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில் சத்யராஜுடன் சீதா மற்றும் ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் சத்யராஜ். பின்பு குணச்சித்திர நடிகராக நடித்து வந்த போது, 'பாகுபலி' படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருக்கு பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தனது பிஸியான படப்பிடிப்புகளிலும் வெப் சீரிஸில் நடிக்க சத்யராஜ் தேதிகள் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
