

கமல்ஹாசன் மற்றும் அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் வெவ்வேறு இடங்களில், வீடுகளில் சுயமாகத் தனிமைக்குள்ளாகி வசித்து வருகின்றனர்.
கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவும், மூத்த மகள் ஸ்ருதியும் மும்பையில் தனித்தனி அபார்ட்மென்ட்டில் வசித்து வருகின்றனர். கமலும், இளைய மகள் அக்ஷராவும், சென்னையில் வெவ்வேறு வீடுகளில் வசித்து வருகின்றனர். ஸ்ருதி ஹாசன் பத்து நாட்களுக்கு முன்னால்தான் லண்டன்லிருந்து திரும்பியுள்ளார். வந்த நாளிலிருந்து வீட்டிலேயே தனிமையில் இருக்கிறார்.
இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், "எனக்குத் தனிமையில் இருப்பது வழக்கம். வெளியே போக வாய்ப்பில்லாமல் இருப்பதும், இனி என்ன ஆகும் என்ற அச்சமும்தான் கடினமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக மக்கள் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்துவிட்டனர். நல்ல வேளையாக நான் லண்டனிலிருந்து திரும்பும்போதே படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.
எனது மொத்தக் குடும்பமுமே சுயமாகத் தனிமையில் இருக்கிறது. அம்மா மும்பையில், அப்பாவும் அக்ஷராவும் சென்னையில் வெவ்வேறு வீடுகளில் தனியாக இருக்கின்றனர். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயணத்திட்டம் இருந்ததால் ஒரே இடத்தில் தனிமைக்குள்ளாகி வசிப்பதில் அர்த்தமில்லை என நினைத்தோம். இதுபோல ஒவ்வொருவரும் முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஸ்ருதி பதிவிட்டுள்ளார்.