21 நாட்கள் சுயக் கட்டுப்பாட்டைப் பழகிக்கொள்ளச் சிறந்த வாய்ப்பு: காஜல் அகர்வால்

21 நாட்கள் சுயக் கட்டுப்பாட்டைப் பழகிக்கொள்ளச் சிறந்த வாய்ப்பு: காஜல் அகர்வால்
Updated on
1 min read

21 நாட்கள் சுயக் கட்டுப்பாட்டைப் பழகிக்கொள்ளச் சிறந்த வாய்ப்பு என்று காஜல் அகர்வால், தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அதில், "அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து ஊர்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

இந்த முடிவுக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"பழைய பழக்கங்களைக் கைவிட, புதிய பழக்கங்களை, வழக்கத்தை ஆரம்பிக்க, 21 நாட்கள் சரியான கால நேரம். நான் ஏற்கெனவே சில இணையப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்திருக்கிறேன், புத்தக வாசிப்பை அதிகரித்திருக்கிறேன். தியானம், சமையல், வீட்டு வேலை, குடும்பத்துடன் நல்ல நேரத்தைச் செலவிடுதல் என ஆரம்பித்துவிட்டேன்.

உங்கள் நேரத்தை நீங்கள் எப்படிப் பயனுள்ளதாக ஆக்குகிறீர்கள் என்று எனக்குச் சொல்லுங்கள். அடுத்த 21 நாட்கள் சுயக் கட்டுப்பாட்டைப் பழகிக்கொள்ளச் சிறந்த வாய்ப்பு. நமது தேவைகளையும், பயன்பாட்டையும் குறைத்துக்கொள்வோம். நுகர்வோர் கலாச்சாரத்தை ஒடுக்குவோம்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, மருத்துவ ஊழியர்களுக்கு, உதவியாளர்களுக்குப் பயிற்சி, சுகாதாரக் கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு மத்திய அரசும் 15,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதைக் கேள்விப்பட்டது நிம்மதியைத் தருகிறது".

இவ்வாறு காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in