

தனக்குப் பிடித்த தத்துவம் என்ன என்பதை பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் ரஜினி தெரிவித்தார்.
டிஸ்கவரி சேனலில் பியர் க்ரில்ஸின் 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து வனப்பகுதிகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் தோன்றுவது இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சி நேற்று (மார்ச் 23) இரவு டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பியர் க்ரில்ஸ் உடனான பயணத்தின்போது, அவர் எழுப்பிய பல கேள்விகளுக்கு உற்சாகமாய் பதிலளித்தார் ரஜினி. அதில், "வாழ்க்கையில் நீங்கள் கடினமான விஷயங்களை எப்படி எதிர்கொள்வீர்கள், புகழை எப்படிக் கையாள்வீர்கள்" என்று ரஜினியிடம் பியர் க்ரில்ஸ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ரஜினி, "இதுவும் கடந்து போகும் என்று நினைப்பேன். இதுதான் எனக்கு மிகவும் பிடித்த தத்துவம். மேலும், புகழ்ச்சி வருவதால் நமது அந்தரங்கம் என்று எதுவும் இருக்காது. நமக்குப் பிடித்த எதையும் செய்ய முடியாது. பிடித்த இடங்கள் என எங்கும் செல்ல முடியாது. எனவே நமது புகழ்ச்சிக்கு நாம் தரும் விலை இது.
நான் ரஜினிகாந்த் என்பதை என் தலைக்கு எடுத்துச் செல்வதில்லை. நடித்து முடித்துவிட்டால் அவ்வளவுதான். ரஜினிகாந்த் என்ற பிம்பம் அதோடு முடிந்தது. மீண்டும் சிவாஜி ராவ் என்ற சிந்தனைக்குள் சென்றுவிடுவேன். இப்படித்தான் எனது தொழில் வாழ்க்கை இருக்கிறது. யாராவது என்னிடம் வந்து நீங்கள் ரஜினிகாந்த் என்று ஞாபகப்படுத்தினால்தான், 'ஓ ஆமாம்... நான் ரஜினிகாந்த்' என்று நினைவுக்கு வரும். எவ்வளவு பணம், புகழ் என்று இருந்தாலும் நல்ல பண்புகள் இல்லையென்றால் எதற்கும் பயனில்லை" என்று பதிலளித்தார் ரஜினி.