

அரசியல்வாதிகள் தண்ணீர் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ரஜினி குறிப்பிட்டார்.
டிஸ்கவரி சேனலில் பியர் க்ரில்ஸின் 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து வனப்பகுதிகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் தோன்றுவது இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சி நேற்று (மார்ச் 23) இரவு டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
பல்வேறு பேட்டிகளில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும், நதிகள் இணைப்பு குறித்தும் பலமுறை பேசியிருக்கிறார் ரஜினி. பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியிலும் தண்ணீர் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் ரஜினியிடம் கேள்விகள் எழுப்பினார் பியர் க்ரில்ஸ்.
தண்ணீர் பிரச்சினை குறித்து ரஜினி, "தண்ணீரை ஆள்பவரே உலகை ஆள்வார் என்பதே விஷயம். அதனால் தண்ணீர் பிரச்சினை பற்றி நீங்கள் பேச ஆரம்பித்தால் இப்போது இருக்கும் சூழல் நெஞ்சை உலுக்குகிறது. கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமான மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அதனால் தண்ணீர் பிரச்சினை என்பதே பெரிய பிரச்சினை.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மழை நீரைச் சேமிக்க வேண்டும். நிலத்தடி நீரின் அளவை உயர்த்த முயற்சிகள் எடுக்க வேண்டும். நதிகள் இணைப்பு என்பது நீண்ட நாட்களாகப் பலரின் கனவு. இது ஒரு உலகளாவிய பிரச்சினை. இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை.
இந்தியாவின் கிராமப்புறங்களில் 70 சதவீத மக்களுக்குத் தூய்மையான தண்ணீர் கிடைப்பதில்லை. வயிற்றுப்போக்கால் 50 குழந்தைகள் தினம் தினம் இறக்கின்றனர். எனவே, அரசியல்வாதிகள் தண்ணீர் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உயிர் வாழ அடிப்படை தண்ணீர்தான். மெதுவாகச் செய்கிறார்கள். ஆனால், இன்னும் வேகமெடுக்க வேண்டும். இதை இன்னும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்" என்று பேசியுள்ளார் ரஜினி.