'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சி: ரஜினி குறித்து கமல், மாதவன், அக்‌ஷய் குமார் பேசியது என்ன?

'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சி: ரஜினி குறித்து கமல், மாதவன், அக்‌ஷய் குமார் பேசியது என்ன?
Updated on
1 min read

'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சியில் கமல், அக்‌ஷய் குமார் மற்றும் மாதவன் மூவரும் ரஜினி குறித்துப் பேசியது அவரிடம் காட்டப்பட்டது.

டிஸ்கவரி சேனலில் பியர் க்ரில்ஸின் 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து வனப்பகுதிகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் தோன்றுவது இதுவே முதல் முறை.

இந்நிகழ்ச்சி நேற்று (மார்ச் 23) இரவு டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசிய விஷயங்களைக் காலை முதலே, அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் போது கமல், மாதவன், அக்‌ஷய் குமார் மூவருமே ரஜினி குறித்துப் பேசிய விஷயங்கள் அவரிடம் காட்டப்பட்டது.

கமல் பேசும்போது, "இது ஒரு நல்ல மாற்றம் இல்லையா?. வில்லன்களைத் துப்பாக்கியால் சுடுவது, சண்டைப் பயிற்சியாளர் உதவியுடன் பல்டி அடிப்பது என்று செய்துவிட்டு இங்கு நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். நாம் பல முறை இயற்கை குறித்து, அதை ஏன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து, குறிப்பாகத் தண்ணீர் குறித்துப் பேசியிருக்கிறோம். இது போன்ற ஒரு சாகத்தின்போது தண்ணீரைக் கண்டுபிடிப்பது கடினம் என்பது எனக்குத் தெரியும். உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துகள்" என்று பேசியிருந்தார் கமல்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு நடுவே மாதவன் பேசியது ரஜினியிடம் காட்டப்பட்டது. அதில் மாதவன், "வணக்கம் ரஜினி சார். நீங்கள் வனப்பகுதியில் சாகசம் செய்வதைப் பார்க்க நாங்கள் அனைவரும் ஆர்வமாக இருக்கிறோம். எங்கள் பலருக்கு நீங்கள் பெரிய உந்துதலாகத் தொடர்ந்து இருந்து வருகிறீர்கள். அங்கு நிறைய ஆபத்துகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். ஆனால், அதற்கு நீங்கள் ஆண்டவனே நம் பக்கம் இருக்கிறான் என்று சொல்வீர்கள் என்றும் எனக்குத் தெரியும். இந்த மொத்த சாகசத்துக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள். சும்மா அடிச்சு தூள் கிளப்புங்க" என்று பேசியிருந்தார்.

இறுதியாக நிகழ்ச்சி முடிவுக்கு சில மணித்துளிகளுக்கு முன்பு அக்‌ஷய் குமார் பேசியது ரஜினியிடம் காட்டப்பட்டது. அதில் அக்‌ஷய் குமார், "வணக்கம் ரஜினிகாந்த் சார். நீங்கள்தான் திரைத்துறையின் உச்ச நட்சத்திரம். இப்போது வனத்தில் உங்கள் சாகசத்தின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறீர்கள். தலைவா, இதுதான் கடைசி சவால். நீங்கள் எந்தத் தடையாக இருந்தாலும் அதைத் தாண்டி வந்துவிடுவீர்கள், உங்கள் வழி தனி வழி என்று எங்களுக்குத் தெரியும். எனவே பதற்றம் ஆக வேண்டாம்" என்று தெரிவித்தார் அக்‌ஷய் குமார்.

உடனே பியர் க்ரில்ஸ் "உங்கள் வழி தனிவழி தானா" என்று ரஜினியிடம் கேட்டார். அதற்கு, "ஆம் அப்படித்தான் இருந்திருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் ரஜினி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in