

யுவன், சந்தோஷ் நாராயணனை தன் இசையில் பாட வைத்திருப்பது குறித்து அனிருத் கருத்து தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9-ம் தேதி வெளியீடாக இருந்த இந்தப் படம், இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த விழாவில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் பேசியது வைரலானது.
இதனிடையே, இந்தப் படத்தின் பாடல்களில் யுவன் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஒரு பாடலைப் பாடியுள்ளனர். வேறு இசையமைப்பாளர்களை தன் இசையில் பாட வைத்திருப்பது குறித்து அனிருத் கூறியிருப்பதாவது:
“இளைஞர்களிடம் 'மாஸ்டர்' படத்தின் பாடல்கள் தனி ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வித்தியாசமாகப் படமாக்கியுள்ளார். இதில் யுவனும், சந்தோஷ் நாராயணனும் பாடியுள்ளனர். 'இதுபோன்ற ஒரு பாடலை நீங்கள் பாடினால் நன்றாக இருக்கும்' என்று அவர்களிடம் கேட்டபோது, இருவருமே உடனே ஒப்புக் கொண்டனர். 'ஒர் இசையமைப்பாளர் மற்றொரு இசையமைப்பாளரின் படங்களில் பணிபுரிவதா' என்ற ஈகோ எங்களுக்குள் இல்லை. அப்படி இருந்த நிலையைத் தொடர்ந்து நாங்கள் உடைத்து வருகிறோம்"
இவ்வாறு அனிருத் தெரிவித்துள்ளார்.