

’உறவுக்கு கை கொடுப்போம்’ என்கிற படத்தைப் பின்னாளில் ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்று எடுத்து மிகப்பிரமாண்டமான வெற்றிப் படமாக்கினார். அதேபோல், ‘சதுரங்கம்’ படத்தை, பல வருடங்கள் கழித்து, ‘திருமதி ஒரு வெகுமதி’ என்றெடுத்தார். வெற்றி சூடினார்.
விசு, தன் நாடகத்திலும் சினிமாவிலும் எடுத்துக்கொள்ளும் விஷயம்... மிடில் கிளாஸ் வாழ்க்கை. நடுத்தரக் குடும்பத்தின் பிரச்சினைகள், அந்தக் குடும்பத்தின் ஏக்கங்கள், உறவுச்சிக்கல்கள், அந்தப் பிரச்சினைகளையும் ஏக்கங்களையும் சிக்கல்களையும் தீர்ப்பதற்கான சின்னதான தீர்வுகள் என கதைகளில் களமாடுவார் விசு.
படத்தின் கதை என்னவோ மிடில்கிளாஸ் சம்பந்தப்பட்டதுதான். ஆனாலும் எல்லா செண்டர் மக்களும் பார்க்கும்படி, பார்த்து ரசிக்கும்படி வேறொரு டிரீட்மெண்ட்டில் காமெடி கோட்டிங் கொடுத்துக் கொடுப்பதுதான் விசு ஸ்டைல் என்றே உருவாயிற்று.
நாடகத்தில் தனி முத்திரை பதித்தார். அவற்றையெல்லாம் கவனித்த பாலசந்தர், தன் யூனிட்டில் உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொண்டார். இவரின் ‘உறவுக்கு கை கொடுப்போம்’ நாடகத்தைப் பார்க்க வந்த இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், மேடையேறி நாடகத்தைப் பாராட்டிப் பேசினார். அத்துடன், ‘இந்தக் கதையை நான் வாங்கிக்கொள்கிறேன். இதைப் படமாக்குக்கிறேன்’ என்று சொல்லி, கதைக்கான தொகையையும் உடனே கொடுத்தார் கே.எஸ்.ஜி.
பின்னர், அவர் தயாரிக்க, ஒய்.ஜி.மகேந்திரன் இயக்க, ஜெமினி நடிக்க ‘உறவுக்கு கை கொடுப்போம்’ என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது. ஆனால் அந்தப் படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது.
அநேகமாக, இந்தக் கதை பற்றியும் படம் பற்றியும் தோல்வி பற்றியும் மறந்தேபோனார் விசு. ‘பசி’ இயக்குநர் துரை இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த் நடித்த ‘சதுரங்கம்’ படம் ஞாபகம் இருக்கிறதுதானே. வி.குமார் இசையில் ‘மதனோத்ஸவம் ரதியோடுதான்’ என்கிற பாட்டெல்லாம் கூட ஹிட்டுதான். படமும் கூட சுமாரான வெற்றிப் படமாக அமைந்தது.
பிறகு, எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில், விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ திரைப்படம் வெளியானது. இதுதான் விசு திரையில் அறிமுகமான படம். இதையடுத்து, ‘மோடிமஸ்தான்’ எனும் கதையை ‘மணல்கயிறு’ என இயக்கினார் விசு. இதுதான் அவர் இயக்கிய முதல்படம். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படம் பார்த்துவிட்டு, இயக்குநர் விசுவையும் நடிகர் விசுவையும் வசனகர்த்தா விசுவையும் கொண்டாடித்தீர்த்தார்கள் ரசிகர்கள்.
இதன் பின்னர், அடுத்தடுத்து படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். கூடவே, பாலசந்தர் தயாரித்த படங்கள், ஏவிஎம் படங்கள், முக்தா பிலிம்ஸ் படங்கள் என பல படங்களின் கதை விஷயத்திலும் கலந்துகொண்டு, மெருகேற்றிக் கொடுத்தார்.
இப்படி ஏவிஎம்மின் பல படங்களின் கதைப்பின்னணியில் இருந்த விசு, ‘இயக்க வாய்ப்பு கொடுங்கள்’ என்று கேட்டார். ‘சரி கதை சொல்லுங்கள்’ என்றார். விசுவும் கதை சொன்னார். பிடிக்கவில்லை. அடுத்தொரு கதை. அதுவும் பிடிக்கவில்லை. ஆறேழு கதைகள் சொல்லியும் ஏவிஎம்.சரவணனுக்கு பிடிக்கவில்லை. ‘சார்... வாய்ப்பு தர விருப்பமில்லைன்னா, சும்மா ஓபனாவே சொல்லிருங்க சார்’ என்றார். ‘அப்படிலாம் இல்ல. சொல்லுங்க’ என்றார். அப்போதுதான் அந்தக் கதையைச் சொன்னார். ஏவிஎம்.சரவணனுக்கு மிகவும் பிடித்துப் போனது. ‘நல்லாருக்கே’ என்றார். நாடகமாக வந்ததையும் கதையின் உரிமை வாங்கி, படமாக வந்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததையும் விசு விவரித்தார்.
விசுவின் கதை உரிமை, கே.எஸ்.ஜியிடம் இருந்தது. அதை முறைப்படி வாங்கி, படமெடுக்கும் பணி தொடங்கியது. படம் வெளியானது. சுமார் 20 முதல் 27 லட்சத்துக்குள் எடுக்கப்பட்ட அந்தப் படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 200 நாள், 250 நாள் என ஓடியது. மத்திய அரசின் உயரிய விருதான ‘தங்கத்தாமரை’ விருது பெற்ற அந்தப் படம்... ‘சம்சாரம் அது மின்சாரம்’. கதை ஒன்றுதான். ஆனால் சினிமாவுக்கென அவர் அமைத்த டிரீட்மெண்ட் டிராக்தான், விசுஜாலம். கமலாகாமேஷ், லட்சுமி, ரகுவரன், மனோரமா, சந்திரசேகர், மாதுரி, இளவரசி, திலீப், டெல்லிகணேஷ், கிஷ்மு, ஓமக்குச்சி நரசிம்மன், காஜாஷெரீப் என அந்த சேட்டுக்குடும்பத்தார், சலவைத் தொழிலாளி என அவ்வளவே அவ்வளவான கேரக்டர்களை வைத்துக்கொண்டு, அம்மையப்பனாகவே வாழ்ந்திருப்பார் விசு.
இதையடுத்துதான் கவிதாலயாவுக்காக ‘திருமதி ஒரு வெகுமதி’எடுத்தார் விசு. இந்தப் படம்தான் ஏற்கெனவே விசுவின் ‘சதுரங்கம்’ என வந்தது. ஸ்ரீகாந்த் நடித்த கேரக்டரில் பாண்டியன், ரஜினிகாந்த் கேரக்டரில் எஸ்.வி.சேகர் நடித்தார்கள். மேலும் அம்மா கேரக்டரை அண்ணி கேரக்டராக்கினார் விசு. அண்ணியாக கல்பனாவும் அவரின் கணவராக நிழல்கள் ரவியும் நடித்தார்கள். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். இதிலும் விசுஜாலம் கலக்கியெடுத்தது.
டெக்னிக்கல் ஐட்டமெல்லாம் விசு படத்தில் இருக்காது. சிறந்த ஒளிப்பதிவு, பிரமாதமான இசை, பெரிய நடிகர்கள் என்று சினிமா அப்போது வைத்திருந்த பட்டியலையெல்லாம் ஒதுக்கிவிட்டு, தன்னையும் தன் கதையையும் கதை சொல்லும் பாணியையும் கதைக்குத் தக்க நடிகர் நடிகைகளையும் மட்டுமே நம்பினார். இவையெல்லாம் தான் விசு ஸ்டைல் என்று கொண்டாடப்பட்டது. இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
விசுவின் ஜாலத்தையும் விசுவின் ஸ்டைலையும் கையாளக்கூடிய ஒரேயொருவர்... விசுவாக மட்டுமே இருக்கமுடியும்!
ஒரு ‘மணல் கயிறு’... ‘ஒரு ‘சம்சாரம் அது மின்சாரம்’..., ‘ஒரு ‘திருமதி ஒரு வெகுமதி’ போதும்... காலத்துக்கும் நிற்கும்; மிடில்கிளாஸ் நாயகன் விசுவை தலைமுறை கடந்தும் சொல்லிக்கொண்டே இருக்கும்.