

விரைவில் 'மாஸ்டர்' படம் குறித்த அப்டேட்ஸ் படக்குழுவினரால் வெளியிடப்படும் என்று சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9-ம் தேதி வெளியீடாக இருந்த இந்தப் படம், இப்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே படத்தின் ட்ரெய்லர் வெளியீடு எப்போது என்பது தெரியாமலேயே இருக்கிறது. பலரும் மார்ச் 22-ம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் எனத் தகவல்கள் பரப்பினார்கள். ஆனால், நேற்று வெளியாகவில்லை. தற்போது கரோனா அச்சம் காரணமாக பலருமே வீட்டை விட்டு வெளியே வராமல், உள்ளேயே முடங்கிப் போயுள்ளனர்.
'மாஸ்டர்' பற்றிய எந்தவொரு அப்டேட்டுமே இல்லாததால், விஜய் ரசிகர்களோ அந்தப் படத்தில் நடித்தவர்களின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ட்ரெய்லர் வெளியீடு உள்ளிட்டவை குறித்து கேள்விகள் எழுப்பத் தொடங்கினார்.
விஜய் ரசிகர்களிடமிருந்து கேள்விகள் அதிகரிக்கவே, சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் "'மாஸ்டர்' குறித்த அப்டேட்ஸ் விரைவில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனவே தயவு செய்து அமைதியாக இருக்கவும். இப்போதைக்கு, வீட்டில் பாதுகாப்பாக இருந்து கரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கடப்பதற்கான வழிகளைப் பார்ப்போம். அவசியமான தேவைகளுக்காக மட்டும் வெளியே செல்லுங்கள். உடல்நலம் தான் முக்கியம்" என்று தெரிவித்துள்ளார் சாந்தனு.