தனது ட்வீட்டை ட்விட்டர் நீக்கியது ஏன்?- ரஜினி விளக்கம்

தனது ட்வீட்டை ட்விட்டர் நீக்கியது ஏன்?- ரஜினி விளக்கம்
Updated on
1 min read

தனது ட்வீட்டை ட்விட்டர் தளம் நீக்கியது ஏன் என்று ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 341 பேரைப் பாதித்துள்ளது. இதனிடையே இன்று (மார்ச் 22) மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். மக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவில் "வெளியே மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கக்கூடிய கரோனா வைரஸ் 12 முதல் 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே 3-ம் நிலைக்குப் போகாமல் தடுத்து நிறுத்திவிட முடியும். அதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தத் தகவல் உறுதியானது அல்ல என்பதால், ட்விட்டர் தளம் தங்களுடைய பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவை நீக்கிவிட்டது. மேலும், வீடியோவைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட ட்வீட்டையும் நீக்கிவிட்டது. இதனால் பெரும் சர்ச்சை உருவானது.

தற்போது ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”நேற்று பதிவு செய்த காணொளியில் 12 - 14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கரோனா வைரஸ் பரவுவது தடைப்பட்டு, சூழல் மூன்றாம் நிலைக்குச் செல்வது தவிர்க்கப்படலாம் என்று நான் கூறியிருந்தால் அது, "இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்" என்று பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றைப் போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாகப் பின்பற்றி இந்த கொடிய வைரஸ் வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தைச் செலுத்துவோம். இவ்வேளையில் என்னுடைய காணொலியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, ஆதரித்து, மக்களிடம் பதிவைச் சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி”

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in