Published : 22 Mar 2020 03:31 PM
Last Updated : 22 Mar 2020 03:31 PM

கரோனா வைரஸால் ஏற்பட்ட நன்மைகள்; ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தப்பட்ட விஷயம்: பார்த்திபன் பேச்சு

கரோனா வைரஸ் செய்துள்ள நன்மைகள் குறித்தும், ஏ.ஆர்.ரஹ்மான் தன்னிடம் பேசிய விஷயம் தொடர்பாகவும் பார்த்திபன் வெளியிட்ட வீடியோ பதிவில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 22) சுய ஊரடங்கு கடைப்பிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருப்பதால், பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

பல்வேறு பிரபலங்களும் மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். மேலும், இது தொடர்பாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது:

''சில பேரிடம் செருப்பால் அடித்தால் கூட உனக்குப் புத்தி வராது என்று சொல்வார்கள். அப்படி ஒரு செருப்படி தான் இந்த கரோனா வைரஸ். இந்த வைரஸ் கெடுதலை விட ஒரு விதமான நன்மையைக் கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். இதனால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், 10 - 15 நாட்கள் உலக நாடுகள் அனைத்துமே அமைதியைக் கடைப்பிடிப்பது, மக்கள் வீட்டுக்குள் இருப்பது உள்ளிட்டவை மூலம் இந்த பூமியில் நடைபெற்றுள்ள மாற்றங்கள் அலாதியானது, அற்புதமானது.

சில பறவைகள் சுதந்திரமாக உலவும் வீடியோக்கள் பார்த்தேன். இந்த புவியையே மாசுபடுத்தி வைத்திருப்பது மனிதனுடைய கட்டுப்பாடற்ற நிலை என்பது புரிகிறது. அதனால், இந்த ஊரடங்கு சட்டம் ஒரே நாளாக இல்லாமல், 6 மாதத்துக்கு ஒரு நாள் இந்த போக்குவரத்து நெரிசல் எல்லாம் இல்லாமல், உலக அமைதிக்காகவும், மாசுக் கட்டுப்பாட்டையும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே மாதிரி வீட்டுக்குள்ளேயே இருப்பதால், குடும்ப உறவுகள் மேம்படும்.

கரோனாவைப் பற்றி தீமைகளைச் சொல்லாமல் நன்மைகளைச் சொல்கிறான் என நினைக்க வேண்டாம். கரோனா வைரஸ் வைத்து மீம்ஸ், நெகடிவ் கருத்துகள் பார்க்கிறேன். மக்கள் ஊரடங்கின் மூலம் பாரதப் பிரதமர் இந்த கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்கிறார். உடனே அது பாஜக சம்பந்தமான விஷயமாக மாறிவிடுகிறது. அனைத்திலுமே எதிர்வினையைப் பார்க்கிறோம்.

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது உலகத்தில் மிகப்பெரிய மாசுக்குக் காரணம் எதிர்மறைதான். சமூக வலைதளங்கள் மூலமாக அவ்வளவு பரப்புகிறார்கள் என்றார். அதைப் பரப்பாமல் இருப்பதை நம்முடைய முக்கியமான குறிக்கோளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

என்னால் முடிந்தவரைக்கும் சுயக் கட்டுப்பாடுடன் எப்படி இதை அணுக முடியும். உதவி இயக்குநர்கள் எல்லாம் சேர்ந்து 10- 15 நாட்கள் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே கதை விவாதம் பண்ணுவது. இதை சுயக் கட்டுப்பாட்டுடன் பண்ண வேண்டும் என ஆசைப்படுகிறேன். இப்படித்தான் நாங்கள் இருக்கிறோம்.

(கையில் சானிடைசருடன்) இதை ஸ்ப்ரே பண்ணினால் வைரஸைக் கட்டுப்படுத்தலாம் என்பதைவிட, நான் ஸ்ப்ரே பண்ண வேண்டும் என்று நினைப்பது நமக்குள் இருக்கும் கட்டுப்பாடு மற்றும் தூய்மை. அதை ஸ்ப்ரே பண்ணினாலே இந்தத் தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.

நமது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரே களத்தில் இறங்கிப் பணிபுரிவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சும்மா ஏ.சி. அறையிலிருந்து கட்டளையிடாமல் பணிபுரிவதைப் பார்க்கும்போது, எனக்கு அந்த ஆர்வம் வருகிறது. ஒன்றுமே தெரியாமல் அங்கு சென்று கூட்ட நெரிசலை அதிகப்படுத்துவதை விட, நான் சரியாக இருந்தால் என்னைச் சேர்ந்த 10 பேர் சரியாக இருப்பார்கள். சுயக் கட்டுப்பாடு ஆரோக்கியத்தின் அடித்தளம். சமூகக் கட்டுப்பாடுகள் இந்த உலக அழிவிலிருந்து நம்மைக் காக்கும்”.

இவ்வாறு பார்த்திபன் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x